குறுந்தொகையில் குறிஞ்சித்திணைக் காதல்(கள்)

                        உரைக்குள் செல்லுவதற்கு முன் தலைப்பை சற்று பார்ப்போமா? சங்க இலக்கிய நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு, பதினெண்மேற்கணக்கு என பாடல்களின் அடிகளுக்கு ஏற்ப பதினெட்டு, பதினெட்டு நூல்களாக இருபெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.  நான்கு அடிகளுக்கு மேற்பட்டவை பதினெண்மேற்கணக்கில் வரும். இது மேலும் இரண்டு வகையாக எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு என பகுக்கப்பட்டுள்ளது. தொகைப்பாடல் என்பது பலரால் இயற்றப்பட்ட பல்வேறு பாடல்களின் தொகுப்புப்பாடல் என்றும் கொள்ளலாம். இங்ஙனம் தொகுக்கப்பட்ட எட்டு நூல்களே எட்டுத்தொகை என அழைக்கப்படுகிறது.

           

              நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

                ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்

                கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அறம்புறம்என்று

                இத்திறந்த எட்டுத் தொகை.”

 

            இவையே அந்த எட்டுநூல்கள். இவற்றுள் நல்ல என்னும் அடைமொழி பெற்று விளங்குவது குறுந்தொகை மாத்திரமே. மற்ற ஏழு நூல்களில் இல்லாத மற்றுமொரு சிறப்பு என்ன தெரியுமா? முதல் தமிழ்ச்சங்கத்தில் இறையனார் என்ற பெயரில் இறைவனே வந்து தருமிக்கு இயற்றித் தந்ததாகக் கருதப்படும்

                     

              “கொங்குத் தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

                காம‍ம் செப்பாது கண்டது மொழிமோ?

                பயிலியது நட்பின் கெழீஇய மயிலினும்

                செறிஎயிற்று அரிவை கூந்தலின்

                நறியவும் உளவொ நீ எறியும் பூவே!”

 

            என்னும் பாடல் அமையப்பெற்றது குறுந்தொகை.  குறுந்தொகைப்பாடல்கள் அகப்பொருளை விளக்குவதாக உள்ளன. அதென்ன அகப்பொருள்? தலைவனும் தலைவியும் கூடி வாழ்ந்து, பிரிவாற்றி, ஊடல் கொண்டு, பிரிதலில் வருந்தி, என்பதெல்லாம் இயல்பான வாழ்வுதான். ஆனால் அத்தகைய வாழ்வில்தான் எத்தனை உணர்ச்சிகள்,  எத்தனை நிகழ்ச்சிகள் வந்து வந்து போகும்?

            இவற்றை தம் கற்பனைத் திறத்தாலும், புலமைத்திறத்தாலும் நல்ல பல பாடல்களாக தந்தனர் நமது சங்ககாலப் புலவர்கள். பாடல்கள் என்றால் நாம் இப்போது எழுதுவது போல அல்ல. பாடல்களுக்கென உள்ள பல இலக்கண விதிகளுக்கு உட்பட்டு எழுதப்பட வேண்டும்..

           

            அகப்பொருள் இலக்கணம்  மூன்று பொருட்களால் ஆனது. அவை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகும்.

            என்னடா? இது காதல் கதைகள் என்று நினைத்தோம், இதென்ன தமிழ் இலக்கண வகுப்பு போல உள்ளதே என எண்ணாதீர்கள். காதல் என்றாலும் அதனையும் கட்டாக வடிவமைத்தனர் நமது முன்னோர்கள். சிலவற்றை நாம் இன்னும் தெளிவாக புரிந்து கொண்டால், பாடல்களைப் புரிந்து கொள்ளுதல் இன்னும் எளிதாகும்.

 

            1. முதற்பொருள் இரண்டு வகையாகும். அவை நிலமும், பொழுதும். அதாவது இந்தப்பாடல் எந்நிலத்தில் நடந்தது? எப்பொழுதில் நடந்தது என்பது பற்றி அப்பாடலிலேயே சொல்லியிருக்க வேண்டும்.

            திணைகள் குறிஞ்சி, முல்லை மருதம், நெய்தல், பாலை ஐவகைப்படும் என்பது நாமறிந்ததே.

            பொழுது? அது இருவகைப்படும். பெரும் பொழுது, சிறுபொழுது.

            பெரும்பொழுது என்பது ஓராண்டை அதாவது பன்னிரு மாதங்களை ஆறுவகையாக பிரித்துக் கூறல்.  

            சித்திரையும் வைகாசியும் இளவேனில்;

            ஆனியும் ஆடியும் முதுவேனில்;

            ஆவணியும், புரட்டாசியும் கார்காலம்;

            ஐப்பசியும் கார்த்திகையும் கூதிர்காலம்;

            மார்கழியும் தையும் முன்பனிக்காலம்;

            மாசியும் பங்குனியும் பின்பனிக்காலம்;

 

        சிறுபொழுது என்பது ஒருநாளை அதாவது இருபத்து நான்கு மணிநேரத்தை ஆறுவகையாக பிரித்துக் கூறல்.  

            வைகறை – 2 முதல் 6மணி வரை                           

            காலை – 6 முதல் 10மணி வரை

            நண்பகல்  – 10  முதல் 2மணி வரை                       

            எற்பாடு – 2 முதல்  6மணி வரை

            மாலை – 6 முதல் 10மணி வரை                             

            யாம‍ம் – 10 முதல் 2மணி வரை

           

           
        2. அடுத்தது கருப்பொருள். அதாவது இவ் ஐவகை நிலங்களின் சூழல்களில் உள்ளவற்றைக் கூறுவது. கடவுள், மரம், செடி, விலங்கு, பறவை, பூ, உணவு, நீர்நிலைகள், தொழில் என அந்நிலத்தைப் பற்றிய குறிப்பு ஏதேனும் அப்பாடலில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

 

            3. மூன்றாவதாக உரிப்பொருள். அதாவது நிலத்திற்கு உரிய பொருள் உரிப்பொருள் ஆனது.  இன்னும் தெளிவாக, பாடல் ஐவகை திணை உணர்ச்சிகளில் ஏதேனும் ஒர் உணர்ச்சியைக் கொண்டிருக்க வேண்டும்.

குறிஞ்சித்திணை - புணர்தல்; அதாவது தலைவனும் தலைவியும் கூடி இன்புறுதல்;

முல்லைத்திணை - பிரிவாற்றுதல்; அதாவது கூடிய தலைவன் பிரியும் போது அப்பிரிவை ஏற்றுக் கொள்ளுதல்;

மருதத்திணை - ஊடல்;  பிரிந்த தலைவன் திரும்பி வரும் போது இவனுடன் ஊடல் கொண்டு பின் இணைதல்;

நெய்தல்திணை - இரங்கல்; ஒருவேளை தக்கச் சமயத்தில் தலைவன் திரும்பி வராவிட்டால் அவனை எண்ணி புலம்புதல்;

பாலைத்திணை - பிரிதல்;  தலைவன் திரும்பியே வராது பிரிந்து விடுதல்; அல்லது தலைவனும் தலைவியும் வீட்டை விட்டுப் பிரிதல்;

 

            இப்படி, ஒரு பாடலை எடுத்துக்கொண்டால் அதில்

நிலம், பொழுது என்னும் முதற்பொருளும்,

சூழலைப் பற்றிய கருப்பொருளும்,

உணர்ச்சியைப் பற்றிய உரிப்பொருளும் இருக்க வேண்டும்.

 

            அடுத்து,  அகப்பாடல்களில் பெரும்பங்கு வகிப்பது தலைவன், தலைவியை விட தோழி என்னும் கதைப்பாத்திரம்தான். பெரும்பான்மையான பாடல்கள் தோழியின் வாய்மொழியாகவே அமைந்திருக்கும். தலைவியின் தாயும், தோழியின் தாயும் இருவருக்கும் மாறி மாறி தாய் மற்றும் செவிலித்தாயாக இருப்பார்கள். தோழிதான் தலைவன், தலைவி எங்கு சந்திக்க வேண்டும்? எப்பொழுது சந்திக்க வேண்டும்? இன்னும் என்னென்ன பரிசுப் பொருள் கொண்டு வந்தால் தலைவிக்குப் பிடிக்கும் என்று தலைவனுக்கு கூறி... தலைவன் நல்லவன் எனில் அவனைப் பற்றியும் அவளுக்கு எடுத்துரைத்து... தாய் மற்றும் செவிலித்தாய் அறியாதவாறு இவர்கள் காதலை வளர்த்து விட்டு... பின்னர் தக்கநேரம் வரும் போது அவர்களிடம் தோழியே மெய்யைக் கூறி கற்பு மணத்தில் கொண்டு விடுவாள்.

 

            இதுவே களவு மண வாழ்க்கை. அந்த களவு மண வாழ்வு பெரும்பாலும் நடப்பது குறிஞ்சித்திணையில்தான்.  அத்தகைய காதல்கதைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

            இனி நேரடியாக தலைப்பிற்குள். குறிஞ்சித்திணை என்றால் மலைநாடு இல்லையா? அதனால் தலைவனும் தலைவியும் மலைநாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மலைநாட்டைப் பற்றிய வருணனைகள் இருக்க வேண்டும். மலைநாடுகளில் உள்ள மரம், பறவை, விலங்கு, மலர், அருவி பற்றிய குறிப்புகள் இருக்கும். குறிஞ்சிக்கே உரிய உரிப்பொருளான கூடி இன்புறுதல் பற்றிய குறிப்பு இருக்கும்.

                       


சில பாடல்கள் மட்டும் உங்கள் முன்.

            முதலில் தலைவன் தலைவியை எங்கோ கண்டு விடுகிறான். கண்டவனுக்கு அவளை மறக்க முடியவில்லை. அவளுடைய அழகு அவனை மயக்குகிறது. அவள் அழகை வருணித்து அவளைக் கூடுவது எவ்வளவு இனிது என்று ஏங்குவதாக இப்பாடல் அமையப்பெற்றுள்ளது. பொருளினைக் கூறிப்பின் பாடலைச் சொல்கிறேன்.

            1. காந்தள்மலர், பசுமையாய் விரிந்த முல்லை நறுமணங்கோண்ட குவளை போன்ற மலர்கள் ஒன்றாக கலந்து தொடுத்த நறுமணம் மிக்க மாலையைப் போன்றவள் நான் பார்த்தவள். அவளது மேனி தளிரை விட மென்மையானது. அவளைத் தழுவுதல் எவ்வளவு இனிது என மயங்குகிறான். பாடல்....

         

          “கோடல் எதிர்முகைப் பசுவீ முல்லை

        நறுஇதழ்க் குவளையொடு இடைப்பட்ட விரைஇ

        ஐதுதொடை மாண்ட கோதைபோல

        நறிய நல்லோள் மேனி

        முறியினும் வாய்வது; முயங்கற்கும் இனிதே!”

 

           

            2. ஒருவழியாக அவளுடைய தோழியைக் கண்டு தலைவியைக் காண விண்ணப்பம் வைக்கிறான். தோழியிடம் தலைவிக்காக செங்காந்தள் மலர்களை பரிசலாகத்  தருகிறான். இது எப்படி இருக்கிறது தெரியுமா? திருநெல்வேலிப் பெண்ணிற்கு அல்வா கொடுப்பது போலவும், மஸ்கட் பெண்ணுக்கு பேரீச்சை கொடுப்பது போலவும்;

            . அதாவது.. போர்க்களம் எங்கிலும் பகைவரைக் கொன்றழித்தவன் எங்கள் முருகன். அதனால் செந்நிற அம்புகளும், செந்நிறத் தந்தம் கொண்ட களிறும், காலில் வீரக்கழலும் கொண்டிருப்பான் அவன். அவனது குன்றம் இது. இங்கு செங்காந்தள் மலர்கள் மிகுதியாகக் கொண்ட குலைகள் நிறைந்திருக்கும். இதை நீ தெரிந்துகொள். செங்காந்தள் மலர்கள் கொட்டிக் கிடக்கும் குறிஞ்சிநிலப்பெண்ணிற்கு அம்மலர்கள்தானா பரிசு என்று கூறி மறுக்கிறாள். பாடல்..

         

          “செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த

        செங்கோல் அம்பிற் செங்கோட்டு யானைக்

        கழல் தொடிச் சேஎய் குன்றம்

        குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.”

 

           

            3. தோழி மறுத்ததால் அவள் உதவியின்றி தானே தலைவியை அடைய வழி உண்டு என்று கூறி, ‘மடலூரப் போகிறேன். அதனால் எனக்கு இழிவு என்றாலும் நான் துணிந்து விட்டேன் என்கிறான். மடலூர்தல் என்பது.. ஊராத  குதிரைப்பொம்மையில் ஏறி, யாரும் சூடாத எருக்கங் கண்ணிச்சூடி,  வீதியில் ஊர்வலம் வந்து தன் காதலை வெளிப்படுத்துதல். ஊர்மக்கள் அதைப் பார்த்து ஆர்ப்பரித்து நகைப்பர்.

            நம் தலைவனும் இந்நிலைக்குத் துணிந்து, ‘காதல் மிகுந்து விட்டால் எல்லா ஆடவரும் செய்யும் செயலை நானும் செய்யப்போகிறேன். மடலூர்தல் மட்டுமல்ல எங்கள் காதலுக்காக பிறவும் செய்வோம் என கூறுகிறான். பாடல்..

         

      “ மாஎன மடலும் ஊர்ப்ப; பூஎனக்

        குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப;

        மறுகின் ஆர்க்கவும் படுப;

        பிறிதும் ஆகுப; - காமம் காழ்க் கொளினே.”

 

 

            4. இவனது புலம்பல்களைப் பார்த்த தோழியும் மனமிரங்கி, தலைவியிடம் தலைவனைப் பற்றிக் கூறுகிறாள்.

            அவன் ஒருநாள் மட்டும் வருகிறான் அல்லன், இருநாள் மட்டும் வருகிறான் அல்லன். பலநாள்கள் வந்து பணிவான சொல் பேசி நிற்கிறான்.  என் நெஞ்சமும் அவனைக் கண்டு இளகுகிறது. இறுதியில்... உயர்ந்த மலையில் இருக்கும் பெரிய தேனடையில் உள்ள தேனைப் போன்று யாருக்கும் பயனற்றுத் திரும்பிப் போகிறான். இப்போது எங்கே இருக்கிறானோ? வேறு நாட்டில் இடியுடன் பெய்யும் பெரிய மழையினால் உண்டான நீரானது, நம் நாட்டிற்கு  ஓடி வந்து, இங்கு கலங்கி இருப்பது போல.. எங்கேயோ இருக்கும் அவனது நிலையை எண்ணி என்மனமும் கலங்குகிறதே.. அவன் நம் தந்தையைப் போன்று உனைக் காப்பான் என்று கூறுகிறாள். பாடல்..

         

      “ஒருநாள் வாரலன் இருநாள் வாரலன்

        பலநாள் வந்து பணிமொழி பயிற்றி; என்

        நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த, பின்றை

        வரைமுதிர் தேனின் போகி யொனே

        ஆசுஆகு எந்தை – யாண்டுஉளன் கொல்லோ?

        வேறுபுலன் நல்நாட்டுப் பெய்த

        ஏறுடை மழையின் கலிழும் என் நெஞ்சே!”

 

            5. ஒருவழியாக தலைவனும் தலைவியும் சந்தித்து ஒருவரையொருவர் விரும்பி களவு வாழ்வு வாழ்கின்றனர். சில நாள் கழித்து, தலைவியைச் சீண்டுவதற்காக தோழி, அப்படி என்ன உயர்ந்த காதல் உங்களுடையது?’ என்று கேட்க..

            தலைவியும், மலையில் கரிய கிளைகளையுடைய குறிஞ்சி மரத்தின் மலர்களைக் கொண்டு பெருந்தேனை உறிஞ்சி வாழும் வண்டுகள் நிறைந்த நாட்டினைச் சேர்ந்த என்தலைவனிடம் நான் கொண்டுள்ள காதல், நிலத்தை விட பெரிதானது; வானை விட உயர்ந்தது; கடல்நீரை விட ஆழமானது என்கிறாள். பாடல்..

           

       “நிலத்தினும் பெரிதே;  வானினும் உயர்ந்தன்று;

        நீரினும் ஆர்அளவின்றே – சாரல்

        கருங்கோள் குறிஞ்சிப்பூக் கொண்டு

        பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே!”

 

 

            6. இப்படி தலைவன் இரவில் வந்து வந்து போவதை எண்ணி தோழிக்கு அச்சம் வருகிறது. இரவு நேரத்தில் மலைப்பாதைகளில், மழைக்காலங்களில் விலங்குகளால், பகைவர்களால் ஆபத்து விளையும் என்பதை தலைவனுக்கு உணர்த்த எண்ணுகிறாள். தலைவியிடம் கூறுவது போல பொதுவாக.. படமெடுக்கும் பாம்பைப் போன்ற கரிய இரவுப் பொழுது என்று எண்ணாது, இந்த இடியிடிக்கும் சமயத்திலும், யாருமறியாது வந்து உன் மூங்கில் போன்ற தோளில் சாய்ந்து இன்பம் பெறுவது எல்லாம் சரிதான். ஆனால் அதன்பின் அவர் ஊருக்குச் சென்று சேர்ந்தாரா? நாளை மீண்டும் வந்து விடுவாரா என்பதை அறியாமலும், கேட்க இயலாமலும் இருக்கிறோம், நாம் என்ன செய்வது? என்று கூறி விரைவில் கற்பு மணம் புரிய இருவரையும் தூண்டுகிறாள்.
பாடல்...

              “சேறீரோ எனச் செப்பலும் ஆற்றாம்;

                வருவீரோ? என வினவலும் வினவாம்;

                யாங்குச் செய் வாம்கொல் – தோழி – பாம்பின்

                பையுடை இருந்தலை துமிக்கும் ஏற்றோடு

                நடுநாள் என்னார் வந்து,

                நெடுமென பணைத்தோள் அடைந்திசி னோரே!”

 

            7. இந்தப் பாடலிலும் இங்ஙனம் இரவிலே வருவதை நிறுத்தி விட்டு விரைவில் கற்பு மணம் செய்ய சொல்கிறாள்.அதாவது...நீங்கள் காதல் புரிவது இருக்கட்டும். நிதமும் காணாவிட்டால் உங்கள் தொடர்பு தேயுமா? இல்லையே? நள்ளிரவில் எங்கோ காட்டுக்குள் யாரும் அறியாமல் பெருமழை பெய்ததை...அடுத்த நாள் இங்கே மலையில் அருவிகளானது ஒழுகி ஊருக்குக் காட்டி விடுகின்றனவே..அதுபோல நீவிர் வந்து வந்து போவதையும், நீங்கள் சந்திப்பதையும் ஊரார் அறிந்து கொள்வர் என்கிறாள். பாடல்...

 

               “காம‍ம் ஒழிவது ஆயினும் – யாமத்துக்

                கருவி மாமழை வீழ்ந்தென அருவி

                விடரகத்து இயம்பும் நாட! – எம்

                தொடர்பும் தேயுமோ, நின்வயி னானே?”

 

            8. தோழி கூறியதைச் சிந்தித்த தலைவன் அடுத்தநாள் தலைவியைப் பார்க்க வரவில்லை. உடனே தலைவி புலம்ப ஆரம்பிக்கிறாள். கானமயில் பாறையின் இடுக்குகளில் ஈன்ற முட்டைகளை, கருங்குரங்கின் குட்டியானது வெயிலில் உருட்டி விளையாடும், மலை நாட்டைச் சேர்ந்தவனான என் தலைவனின் நட்பு எல்லாருக்கும் நன்மை தருவதுதான். ஆனால் அது அவனது பிரிவைத் தாங்கும் ஆற்றல் கொண்டவருக்கு. என்போன்ற மையுண்ட கண்ணில் வழியும் கண்ணீரோடு பிரிவைத் தாங்க இயலாதவர்களுக்கு நன்மை பயக்காது. துயரைத் தான் தரும்’, என்கிறாள். பாடல்...

 

               “கான மஞ்ஞை அறையீன் முட்டை

                வெயில்ஆடு முசுவின் குருளை உருட்டும்

                குன்ற நாடன் கேண்மை என்றும்

                நன்றுமன் வாழி – தோழி! உண்கண்

                நீரோடு ஓராங்குத் தணப்ப,

                உள்ளாது ஆற்றல் வல்லு வோர்க்கே!”

 

            இங்ஙனம் குறிஞ்சித் திணைக்காதல்களை நாம் கூறிக் கொண்டே போகலாம். எல்லாப் பாடல்களிலும், முதற் பொருளான மலைநாடு என்னும் நிலமும், பொழுதுகள் பற்றிய குறிப்புகளும் இருந்ததைப் பார்த்திருப்பீர்; மேலும் அம்மலை நாடுகளில் உள்ள மரம். பறவை, பூ, விலங்கு போன்ற சூழலை விளக்கும் கருப்பொருளையும் கண்டிருப்பீர்; அது மட்டுமா குறிஞ்சித்திணைக்கு உரிய, தலைவன் தலைவியின் புணர்தல் உணர்ச்சியையும் உணர்ந்திருப்பீர்.

 

            குறுந்தொகையில் குறிஞ்சித்திணைப் பாடல்கள் மட்டுமா அழகு? மற்றத் திணைக்காதல்களும் நயம் மிக்கவைதான். காலம் வரும் போது அவற்றைக் காண்போம்.

 

           

இரண்டடி குறளும் இனியவை நாற்பதும் – ஒப்புமை நோக்கில்.

  முன்னுரை:           தமிழ்மொழியின் தொன்மையும் , புதுமைகளை ஏற்றுக் கொண்டு தன்னை மெருகேற்றிக் கொள்ளும் பாங்கும் யாவரும் அறிந்ததே. நமது இலக்கி...