பெரும்பாணாற்றுப்படை – ஐந்திணைகள்

முன்னுரை

“முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை

பெருகு வள மதுரைக் காஞ்சி - மருவினிய

கோல நெடுநல் வாடை கோல்குறிஞ்சிப்பட்டினப்

பாலை கடாத்தொடும் பத்து.”

எனப் புகழ்ந்து பாடப்படும் பத்துப்பாட்டில் நான்காம் பாடலான பெரும்பாணாற்றுப்படையில் ஐந்திணைகளும் பாடப்பட்டுள்ளன. பேரியாழ் கொண்டிருக்கும் பாணர் என்பதால் பெரும்பாணாற்றுப்படை என்னும் பெயர் பெற்றிருக்க வேண்டும். சிறுயாழைக் கொண்ட பாணர்களை ஆற்றுப்படுத்தும் நூல் சிறுபாணாற்றுப்படை என்றழைக்கப்படுகிறது.

இனி, பண்டைய தமிழ்நாடானது நிலத்தை அடிப்படையாகக் கொண்டு ஐவகையாகப் பிரிக்கப்பட்டு, அவை ஐந்திணை எனப்பட்டது. திணை என்பது ஒழுக்கமுமாகும்; நிலமுமாகும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பது அந்த ஐவகை நிலங்கள் ஆகும்.  இவற்றுள் பாலை என்பது தனி நிலவகை அல்ல. குறிஞ்சியும், முல்லையும் தனது தன்மையில் திரிந்து இருத்தலே பாலை ஆகும். முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்னும் முப்பொருளால் ஆனது திணை. இவற்றுள் முதற்பொருளாம் நிலமும், மூன்றாம் பொருளாம் உரிப்பொருளும் ஒருபோதும் திணைகளுக்குள் மயங்கி வராது. ஆனால் மற்ற கருப்பொருள்கள் திணைகளுக்குள் மயங்கி வருதல் உண்டு. இதுவே திணை மயக்கம் ஆகும். இங்ஙனம் நிலமானது, அவற்றின் தன்மையின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தோடு பிணையப்பட்டிருந்தது; இன்னமும் பிணைக்கப்பட்டுத்தான் இருக்கிறது, என்பதே உண்மையாகும்.

பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவனான தொண்டைமான் இளந்திரையனின் தலைநகரம் திருவெஃகா என்னும் காஞ்சிபுரம். அவனிடமிருந்து ஏற்கனவே பொன்னும் பொருளுமாய் பரிசில் பெற்ற புலவர்கள், தாம் காணும் மற்ற ஏழை பாணர்களை, “நீங்கள் இளந்திரையனைக்  காணச் செல்லுங்கள், அவன் உங்களுக்கு பொன்னும் பொருளும் அள்ளி அள்ளிக் கொடுப்பான். முதலில் நீர்ப்பெயற்று என்னும் காவிரிபூம்பட்டினத்திற்குச் சென்று, பின்னர் அங்கிருந்து அவனுடைய தலைநகரமாம் காஞ்சிபுரம் செல்லுங்கள். செல்லும் வழியெங்கும் அந்தந்த நிலத்திற்குரிய மக்கள் உங்களுக்கு வேண்டிய அளவு  உணவினையும், உதவியினையும் செய்வார்கள். மேலும் உங்களை அச்சுறுத்தும் கொடிய விலங்குகளிடமிருந்தும், பகைவர்களிடமிருந்தும் அவர்களே உங்களைக் காப்பர்” என்று ஆற்றுப்படுத்துகின்றனர். அங்ஙனம் அவர்கள் செல்லும் வழிகளைக் கூறுமிடத்து, வழியில் காணும் மக்களின் உணவு மற்றும் பழக்கங்கள், பறவைகள், விலங்குகள், மலர்கள், மரங்கள் என ஐந்திணைகளின் கருப்பொருள்கள் பலவற்றைத் தெளிவுபட அழகாக விளக்குகின்றார் நூலாசிரியர். நாமும் அவர் காட்டும் வழியில் ஒவ்வொரு திணையாக‍க் காண்போம்.  முதலில்

குறிஞ்சித்திணை.

            மலையும் மலை சார்ந்த இடமும் தான் குறிஞ்சித் திணை ஆகும். அதன் சிறுபொழுது நள்ளிரவும், பெரும்பொழுது குளிர்காலமும் ஆகும்.  அந்நிலத்திற்கான இறைவன் முருகன் ஆவான். குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்த ஆடவர் வெற்பன், சிலம்பன், குறவன் என்றும், பெண்டிர் கொடிச்சி, குறத்தி என்றும் அழைக்கப்படுவர். இந்நிலத்திலுள்ள ஊர்கள் சிறுகுடி என்று வழங்கப்படுகின்றன. மலை என்பதால் இங்கு அருவிகள் நிறைந்து காணப்படும். மேலும் புலி, கரடி, குரங்கு, யானை போன்ற விலங்குகளும், கிளி, மயில் போன்ற பறவைகளும் வாழும். குறிஞ்சி, காந்தள், வேங்கை போன்ற மலர் வகைகளும், பலா, அகில், சந்தனம் முதலான மரங்களும் காணப்படும். இங்கு வாழும் மக்களின் உணவுவகைகள் தினைமாவும், கிழங்குமாகும். இங்குள்ள மக்கள் தங்களின் தொழிலாக தினை விதைத்தல், கிழங்கு எடுத்தல், தேன் எடுத்தல் முதலியவற்றினையும், விளையாட்டுப் பழக்கங்களாக அருவி ஆடல் மற்றும், வெறியாடல் ஆகியவற்றையும் கொண்டுள்ளனர்.

            பெரும்பாணாற்றுப்படையில் புலி போத்து அன்ன புல் அணல் காளைஅதாவது புலி போன்ற குறுந்தாடியைக் கொண்ட ஆண்மகன் என்னும் அடியும், புலி குரல் மத்தம் ஒலிப்ப வாங்கிஅதாவது புலியின் ஒலியைப் போன்று ஒலியெழுப்பும் மத்தினைக் கொண்டு மோர் கடையும்...என்னும் அடியும் புலி என்னும் கருப்பொருளை சுட்டி வருகின்றன. மேலும் பிடி கணத்து அன்ன குதிர் உடை முன்றில்’, பெண்யானைகள்  கூட்டமாக இருப்பதைப் போன்று, நெற்குதிர்கள் உயரமாகவும் மிகுதியாகவும் வீட்டின் முன்றிலில்  இருக்கும், என்னும் அடியும், களிறு தாள் புரையும் திரி மரபந்தர் ஆண்யானையின் பெரிய கால்களைப் போன்ற திரிவைகள் கொண்ட மரப்பந்தல் உள்ள வீடுகள் என்னும் அடிகள் யானையினைப் பற்றிக் கூறுகின்றது.  வண்ண கடம்பின் தறுமலர் அன்ன அதாவது கடம்ப மரத்தின் மணம் மிகுந்த மலர்களைப் போல என்பதில் கடம்ப மரத்தின் பூக்களும்,

அவல் எறி உல்க்கை பாடு விறந்து அயல

கொடுவாய் கிள்ளை படுபகை வெரூஉம் அவல் இடிக்கும் உலக்கையின் ஓசையில், வளைந்த வாயினை உடைய கிளிகள், தம்மை விரட்டும் ஓசையோ என்றெண்ணி வெருண்டோடுமாம், என்பதில் கிளியும் பாடப்படுகின்றது.

மழை விளையாடும் கழைவள் அடுக்கத்து

அணங்கு உடை யாளி தாக்கலின் பல உடை

கணம் சால் வேழம் கதழ்வுற்று ஆஅங்கு

எந்திரம் சிலைக்கும் துஞ்சா கம்பலை

அதாவது, மழைமேகங்கள் விளையாடுமளவு உயர்ந்த மூங்கில்கள் கொண்ட மலையடுக்கத்தில், அச்சமூட்டும் யாளி என்னும் விலங்கு தாக்குவதால், ஒன்றாகக் கூட்டமாயுள்ள யானைகள் கதறுவதைப் போல, ஆங்கே கரும்பு அரைக்கும் எந்திரம் எழுப்பும் ஓசை விடாது கேட்ட வண்ணம் இருக்குமாம். இதில் யாளி என்னும் விலங்கினைப் பற்றி ஒரு செய்தியையும் நமக்குத் தருகிறார். இப்படி குறிஞ்சித் திணைக்குரிய பல கருப்பொருள்களும் பெரும்பாணற்றுப்படையில் தென்பட்ட வண்ணம் உள்ளன.

முல்லைத்திணை

அடுத்தது முல்லைத்திணை. காடும், காடு சார்ந்த நிலமும் முல்லைத் திணை ஆகும். இதனுடைய சிறுபொழுது மாலைநேரமாகும். பெரும்பொழுது மழைக்காலம் ஆகும்.  இந்நிலத்தின் இறைவன் திருமால் ஆவார். இங்கு வாழும் மக்கள் ஆயர், ஆய்ச்சி என்றும், இடையர், இடைச்சி என்றும் அழைக்கப்படுவர். பாடி என்பது இங்ங்குள்ள ஊர்களின் பெயராகும். காட்டாறு பாயும் நிலம் முல்லைநிலம். ஆங்காங்கே குறுஞ்சுனைகளும் காணப்படும். காட்டுக்கோழியும், மான், முயல், ஆடு, மாடு போன்ற விலங்குகளும் வாழும். கொன்றை, குருந்தம், காயா போன்ற மரவகைகளும், முல்லை, பிடவம், தோன்றி முதலான மலர் வகைகளும் இங்கு காணப்படும். வரகு, சாமை இந்நிலத்தின் உணவு வகைகள். ஆதலால் சாமை, வரகு விதைத்தல் போன்ற தொழில்களும், ஆநிரைகள் வளர்ப்பதினால் குழலூதுதலும், ஏறு தழுவுதலும் பழக்கங்களாகவும் உள்ளன.

முல்லை நிலத்தின் தெய்வமான திருமாலைப் பற்றி பெரும்பாணாற்றுப்படையில் மூன்று முறை குறிப்பிடப்படுகிறது,

மாபெரும் நிலத்தைக் கடந்த, திருமகளை மார்பிலே கொண்ட, ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் என்ற மூவகை நீர்கள் கலந்து உருவான  கடலின்  வண்ணமுடைய திருமாலின் வழித்தோன்றியவன் என இளந்திரையனைப் புகழும் போதும்,

நீலநிற உரு கொண்ட நெடியோனாகிய திருமாலின் கொப்பூழில் தோன்றிய நான்முகனைத் தந்த பல இதழ் கொண்ட தாமரைப்பூ என தாமரைப்பூவைப் பற்றி பாடும்போதும்,

நூலோர் எல்லாம் புகழ்ந்த மாட்சிமை கொண்ட திருமாலின் கடலிலுள்ள சங்கைப் போன்று, வெண்ணிற வால்மயிர் கொண்ட குதிரைகள் என்று குதிரைகளின் வெண்ணிறத்தை சங்கோடு ஒப்பிடும் போதும் ஆகிய மூன்று இடங்களில் திருமாலைப் பற்றிக் குறிப்புகள் வருகின்றன.

முல்லை நில மகளிரான ஆயர்மகளைப் பற்றிப் பாடும்போது, புலி போன்று ஒலியெழுப்பும் வண்ணம் மத்தினைக் கொண்டு மோர் கடைவாள். அப்போது காளானின் வெண்ணிற மொட்டுகள் கூம்பு விரிப்பது போன்று உறைந்த இனிய சுவையுடைய நுரை போன்ற வெண்ணெய் எடுப்பாளாம். மோர்த்துளி தெறித்ததால் புள்ளி புள்ளியாய் விளங்கும் பானையை, சும்மாடு வைத்து நாள்தோறும் மோர் விற்பாளாம். நல்ல மாநிற மேனியுடைய அவள், காதிலே சிறிய குழைகளும், மூங்கில் போன்ற தோள்களும், குறுகிய சுருள்கள் கொண்ட கூந்தலும் கொண்டிருப்பாள். மோர் விற்ற பணத்தில் நல்ல உணவு சமைத்து சுற்றத்தோடு அருந்துவாள். நெய் விற்ற பணத்திலோ பொன்னும் பொருளும் வாங்காது, எருமை மாட்டினையும், பசு மாட்டினையும், கன்றுகளையும் வாங்கி வருவாள். என குறிப்புகள் தருகின்றார்.

முல்லை நில ஆடவர் இடையர் எனப்பட்டனர். அவர்கள், பசுவினை ஓட்டும் தடி கொண்ட கையினையும், கோடரி ஏந்திய கையினையும், உறிப்பானைகள் கட்டப்பட்ட காவடி தொங்குவதால் வடு படிந்த தோள்களையும், பால் கறக்கும் கைகைளைத் தடவுவதால் ஈரம் தடவிய மயிரும் கொண்டிருப்பர். கிளையிலும், கொடியிலும் பூத்த மலர்களை விரவி, இன்னும் பல மலர்கள் தொடுத்து கட்டிய கண்ணி மாலையும் அணிந்திருப்பா். அவன் நல்லுடை அணிந்திருப்பா். பால் சோற்றை உண்ணுவா். செந்நிறத்தில் துளையிட்டு செய்த கரிய துளை கொண்ட குழல் கொண்டு பாலைப்பண் வாசிப்பா். அது சலித்து விட்டால் குமிழ மரத்தில் மரல் என்னும் குரும்பை நாரினை, தரம்புகளாக்கி செய்த வில்யாழினைக் கொண்டு குறிஞ்சிப்பண் வாசிப்பராம். இதனைக் கேட்ட வண்டுகள் தம் சுற்றத்தினரின் குரலோ என்று மயங்கி நிற்குமாம்என்று அழகுபட விவரிக்கின்றார். இங்ஙனம் முல்லைத்திணையின் கருப்பொருள்களான மலர்களும், விலங்குகளும், மக்களும், அவர்தம் தொழிலும், என பல குறிப்புகள் பாடலில் உள்ளன.

மருதத்திணை

வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதநிலம் ஆகும். இந்நிலத்தின் சிறுபொழுது வைகறை; பெரும்பொழுது கார்காலம் முதலான ஆறு காலமும் கொண்டது. இந்நிலத்தின் இறைவன் இந்திரன் ஆவான். இங்கு வாழும் மக்கள் உழவன், உழத்தியர், கடையன், கடைசியர், ஊரன், மகிழ்நன் என்று அழைக்கப்படுவர். இந்நிலத்தின் ஊர் பேரூர், மூதூர்  என்றழைக்கப்படும். வயல் சார்ந்த நிலம் என்பதால் ஆறுகளும், கிணறுகளும் நிறைந்திருக்கும். இங்ஙனம் நீர்நிலைகள் உள்ளதால், தாமரை, குவளை போன்ற மலர்களும், அன்னம், நாரை போன்ற பறவைகளும் காணப்படும், எருமை மாடுகள் மேயும். காஞ்சி, வஞ்சி, மருதம் போன்ற மரவகைகள் காணப்படும். நெல்அரிசி இவர்களின் உணவாகும். உழவுத் தொழில் இன்றியமையான தொழிலாகும். களை எடுத்தல், அரிதல் இவையும் உழவோடு தொடர்புடையன. கடா விடல், விழாச்செய்தல், புதுநீர் ஆடுதல் இவர்களின் பழக்கங்களாகும்.

இனி பெரும்பாணாற்றுப்படையில், மருத நிலத்தைப் பற்றிப் பாடும் போது,

செழுங்கன்று யாத்த சிறுதாள் பந்தர்

பைஞ்சேறு மெழுகிய படிவ நல்நகர்

மனையுறை கோழியொடு ஞமலி துள்ளாது

அதாவது அழகான நல்நகரிலுள்ள, கொழுத்த கன்றினைக் கட்டிய சிறிய கால்களுடைய பந்தலையும், பசிய சாணத்தால் மெழுகிய வீடுகளில்  கோழிகளோடு நாய்கள் பொருந்தியிராது.

மேலும் வண்டல் என்னும் விளையாட்டு விளையாடும் பெண்களோடு, நீர் அருந்தும் நீர்த்துறையில் கூடி நீராடும் பேண்களும் கரையில் கழட்டி வைத்த அழகிய காதணிகளை , இரை தேடும் மணிச்சிரல் என்னும் பறவை பொன்மீன் என்றெண்ணி கொத்திச் செல்லுமாம்.

இன்னும் அழகாக நீந்துவதற்கேற்ற நெடிய நீர்நிலையில் தீ போன்று சிவந்து மலர்ந்திருக்கும் செந்தாமரை பூவினடம் செல்லாது, அங்கிருக்கும் தாமரைத் தண்டுகளை நீக்கி, அகன்ற வானில் குறைவில்லாய் தோன்றும் வானவில்லினைப் போன்றிருக்கும் அரக்கு வண்ண இதழ் கொண்ட குவளைப் பூக்களோடு, நீல மலர்களும் மலர்ந்திருக்கும். இவற்றோடு மாறுபட்ட மலர்கள் நிறைந்த முதுநீர் பொய்கையில் களைபறிப்போர் கொடுத்த மொட்டுவிட்ட பல மலர்களையும் கட்டி, விழாக்கள் அமைந்து வரும் நாளில் நீவிர் மாலையாக அணிந்து கொள்வீராக என பாணர்களிடம் மற்ற பாணர்கள் கூறுவதாக சொல்லுமிடத்து, மருத்த்திணையின் கருப்பொருள்கள் பலவற்றைப் பற்றி நூலாசிரியர் குறிப்புகள் கூறுகின்றார்.

நெய்தல்திணை

            நான்காம் வகையான நெய்தல் நிலம் கடலும் கடல் சார்ந்த இடமாகும். இந்நிலத்தின் சிறுபொழுது பிற்பகல்; பெரும்பொழுது - கார்காலம் முதலான எல்லாக் காலமும். இங்கு வருணன் தெய்வமாக தொழப்படுகிறார். இங்கு வாழும் மக்கள் பரதவர், பரத்தியர் என்றும், நுளையர் நுளைச்சியர் என்றும் அழைக்கப்படுவர். கடல் சார்ந்த நிலம் என்பதால் கடற்காகம் பொன்ற பறவைகளும், சுறா மீன் போன்ற கடல்வாழ் விலங்குகளும் காணப்படும். இந்நிலத்தின் ஊர்கள் பாக்கம், பட்டினம்  எனப்படுகின்றன. இங்கு கடலோடு உவர்நீர்க்கேணிகளும் உண்டு. தாழைமலரும் நெய்தல் மலரும், புன்னை மற்றும் ஞாழல் மரங்களும் காணப்படும். மீன் பிடித்தல், உப்பு உண்டாக்கல், இவற்றினை விற்றல் இவர்களின் தொழில். மேலும் கடல் ஆடல் இவர்களின் பழக்கமாகும்.

            முதலில் நீர்ப்பெயற்று என்னும் துறைமுக நகரிலுள்ள கலங்கரை விளக்கத்தைப் பற்றி வானை முட்டுகின்ற, கூரை வேயாத மாடம் கொண்ட வானையே தாங்கிப் பிடிக்கும் தூண் போல அமையப்பெற்று, அதில் இரவு முழுதும் எரியும் விளக்கும் ஏற்றபட்டு இருக்கும். இரவில் கடலில் வரும் கலங்களை கரைக்கு அழைத்தபடி நிற்கும் கலங்கரை விளக்கம் என்று பாடுகிறார்.

            நெய்தல் நிலப் பெண்களான எயிற்றியர் நுண்ணிய புல்லினை வாயில் அடக்கி, வெண்ணிற பல் கொண்டிருப்பர். இவர்கள் உலக்கையால் குத்திய அரிசியை, நீரினை ஊற்றி உடைந்த பானையில் போட்டு, உடைந்த அடுப்பில் வைத்துச் சமைப்பர். நெய்தல் நிலம் என்பதால் இந்த நீரானது உப்புச் சுவை கொண்ட உவரியிலிருந்து எடுக்கப்பட்டிருக்கும். அதனுடன்  வெட்டாமல், வாட வைத்த மீன் அதாவது கருவாட்டை உடனிட்டு சமைப்பர். இங்ஙனம் பார்த்து பார்த்து சமைத்த உணவினை, வாடாத தும்பை மலரும், வீர‍ர் போற்றும் கழலும் அணிந்தவனும், சிவந்த மலையும் உடைநவனுமாகிய தமது அரசனைக் காண வந்தவர்கள் நீவிர் என்று அறிந்தவுடன், மருத நில இஐவனான வருணனிக்குப் படைப்பது போல உங்களுக்குப் படைப்பர். நீங்களும் உண்டு பின் அங்கிருந்து செல்லலாம்.

பாலைத்திணை

குறிஞ்சி, முல்லை இவையிரண்டுக்கும் இடையில் அமைந்த பாழ் நிலம் பாலை எனப்பட்டது. இந்நிலத்தின்  சிறுபொழுது நண்பகல். பெரும்பொழுது வேனில், பின்பனி ஆகும். இந்நிலத்தின் தெய்வம் கொற்றவை ஆகும். இங்கு வாழும் மக்கள் எயினர், எயிற்றியர், மறவரன், மறத்தி என்று வழங்கப்பட்டனர். பாலை நிலம் என்பதை பாழ்பட்ட நிலம் என்பதால் அவர்களின் தொழில் பகற்சூறை மற்றும் வழிப்பறி ஆகும். இங்ஙனம் கிடைப்பதே இவர்களுக்கு உணவும் ஆகும். புறா, பருந்து, கழுகு போன்ற பறவைகளும், செந்நாய் போன்ற விலங்குகளும், உழிஞை, பாலை, ஓமை போன்ற மரங்களும், கரவம், மரவம் போன்ற மலர்களும் காணப்படுகின்றன. இந்நிலத்தின் ஊர்கள் குறும்பு என்றழைக்கப்படுகின்றன.

            பாலை நிலம் பற்றி பெரும்பாணாற்றுப்படையில் விளக்கும் போது, எயினர்கள், கொடிய வில்லேந்துபவர் எனினும், அவர்களின் விருந்தோம்பல் சிறப்பாக இருக்கும் என்கிறது. அவர்களின் ஊரான குறும்பில் காணக்கிடைக்கும் காட்சிகளாக புலவர் விளக்கும் போது பாலைக்குரிய கருப்பொருள்கள் பல வெளிப்பட்டு நிற்கும்.

            நீரின்றி மயங்கிக் கிடக்கும் மான்; வான் பொழியாததால் நீர் வேண்டி தோண்டப்பட்ட குழிகள், அகழிகள் சூழ்ந்த பள்ளங்களில் உள்ளே ஒளிந்து ஒடுங்கி இருக்கும் அகத்திப் பூ போன்ற கொம்புகளை உடைய பன்றிகள்; இவற்றின் வரவை எதிர்நோக்கி வேட்டையாடக் காத்திருக்கும் வேட்டை நாய்கள் வைத்திருக்கும் மக்கள்; இரவு வேட்டையில் ஒன்றும் கிட்டாத்தால் பகல் நேரத்திலாவது ஏதாவது கிட்டுமா என்று வலைகளைத் தொடர்ச்சியாக மாட்டி வைத்திருக்கும் காட்சி; அவ்வழியே செல்லும் நீண்ட செவியினை உடைய முயல்கள் இவ்வலைகளில் மாட்டிக் கொள்ளுதல்; எல்லாவ்றையும் விட உடலையுண்ணும் பருந்து’, என யாருமற்ற பாலை நிலத்தில் அந்நிலத்தின் கருப்பொருள்கள்  பலவற்றைக் கூறுகின்றார்.

            மேலும் யாருமற்ற நிலத்தைக் கடந்து, குறும்பு எனப்படும் பாலைநில மக்களின் ஊருக்குள் வந்தால், நீண்ட, கூரிய, வலிய ஆயுதங்கள் அடுக்கப்பட்ட வாயில்கள் கொண்ட வீடுகள் இருக்கும். கொடிய பாலை நில்தவர் எனினும் ஆரசனைக் காண வந்தோர் என்றால் அவர்களின் விருந்தோம்பல் இன்னும் செம்மையாக வெளிப்படும். சூல் கொண்ட உடும்பின் வறுவல், விட்டிலே சமைத்த கள், கவர்ந்த ஆநிரைகளை விற்று வந்த பணத்தில் வாங்கி வந்த கள் என எல்லவாற்றையும் தாமும் உண்டு, உங்களுக்கும் அளிப்பர்.  

முடிவுரை

    இங்ஙனம் ஐந்திணைகளுக்குரிய கருப்பொருகள்களைப் பற்றி பெரும்பாணாற்றுப்படை முழுதும் குறிப்புகள் கொடுத்தவண்ணம் உள்ளார் உருத்திரங்கண்ணனார். இளந்திரையனின் கொடைத்திறத்தைப் பாடினாலும் எளிய மக்களின் வாழ்வியலையும் மிக அழகாக பதிவு செய்துள்ளார். எல்லா நிலங்களையும் கடந்து, இளந்திரைனை எளிய பாணர்கள் சென்றடையும் போது, இதுவரை தாங்கள் பெற்று மகிழ்ந்திருந்த விருந்தோம்பலும், உணவும், பரிசிலும் மறந்து விடுமளவு இளந்திரையனின் கொடைத்திறம் இருக்குமாம். புத்தாடை உடுக்கச் செய்து, உணவளித்து, தேர் நிறைத்து பரிசிலும், மேற்கொண்டு புரவிகளும் யானைகளும் தருவான் இளந்திரையன் என்று பாடலை நிறைவு செய்கிறார் ஆசிரியர்.

 


இரண்டடி குறளும் இனியவை நாற்பதும் – ஒப்புமை நோக்கில்.

  முன்னுரை:           தமிழ்மொழியின் தொன்மையும் , புதுமைகளை ஏற்றுக் கொண்டு தன்னை மெருகேற்றிக் கொள்ளும் பாங்கும் யாவரும் அறிந்ததே. நமது இலக்கி...