இரண்டடி குறளும் இனியவை நாற்பதும் – ஒப்புமை நோக்கில்.

 முன்னுரை:

        தமிழ்மொழியின் தொன்மையும், புதுமைகளை ஏற்றுக் கொண்டு தன்னை மெருகேற்றிக் கொள்ளும் பாங்கும் யாவரும் அறிந்ததே. நமது இலக்கியங்களில் சங்ககால இலக்கியங்களுக்கும், சங்கம் மருவிய கால இலக்கியங்களுக்கும் அமையப்பெற்ற பெருமை வேறெந்த இலக்கிய வகைக்கும் இல்லையென்று உறுதியாகக் கூறலாம். அவை இயற்றப்பட்டு, ஆண்டுகள் பல ஆயினும், இன்றுவரை தமிழ் தெரிந்தோர் அனைவராலும் விரும்பிக் கற்கப்பட்டும், ஆர்வலர்கள் பலரால் உரைகள் எழுதப்பெற்றும்ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட்டும் வருகின்றன. இத்தகைய பெருமை வாய்ந்த சங்க மருவிய இலக்கியங்களில் வைக்கப்பட்டவைதான் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள். அதாவது நான்கு அடிகளும், அதற்கு குறைந்த அடிகளும் கொண்ட பாடல்களால் ஆன பதினெட்டு நூல்கள், தோகுக்கப்பட்டு இங்ஙனம் அழைக்கப்படுகின்றன. அவற்றுள் நாற்பது என்னும் எண்ணால் குறிக்கப்பெற்ற நான்கு நூல்கள் உண்டு. அவை இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது ஆகியன ஆகும். கார் நாற்பது அகம் பற்றியும், களவழி நாற்பது புறம் பற்றியும் பாடுகின்றன. இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும் அறம் உரைக்கும் நூல்களாம். இன்னா தரும் செயல்களை இன்னா நாற்பதும், இன்பம் தரும் செயல்களை இனியவை நாற்பதும் தொகுத்து கூறுகின்றன. உலகப்பொதுமறையாம் திருக்குறள் அறன் வலியுறுத்தல் என்னும் அதிகாரத்தையே தனது பாயிரமாகக் கொண்ட நூல். இனியவை நாற்பது, காலத்தால் திருக்குறளுக்கு பின் வந்தது என்பதால் இந்த நூலின் கருத்துகள் திருக்குறளின் அறக்கருத்துகளை ஒட்டியே அமையப்பட்டிருக்கின்றன. திருக்குறள் கூறும் பல அறக்கருத்துகள், அதே பொருளில் எங்ஙனம் இந்நூலில் கையாளப்பட்டிருக்கின்றன என்பதை இனி விளங்கக் காண்போம்.

திருக்குறள்

திருவள்ளுவரால் சங்கக்காலத்தில் எழுதப்பெற்றாலும், இரண்டே இரண்டு அடிகளைக் கொண்டிருப்பதால் இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாக வைக்கப்பட்டது. 9 இயல்களும், 133 அதிகாரங்களும், 1330 குறள்களும் கொண்டது. தனிமனிதனுக்காக இயற்றப்பட்ட திருக்குறளில், அரசன் முதல் அமைச்சர் வரை, இல்லறத்தார் முதல் துறவறத்தார் வரை, தலைவன், தலைவி, தூதன், ஒற்றன், உழவன், செல்வம் படைத்தோர், இரப்போர், நட்பு கொண்டவர்கள் என அனைத்துவகை மனிதர்களின் தொழில்களுக்கு ஏற்ப, அவர்களின் தன்மைகளுக்கேற்ப குறள்கள் இயற்றியுள்ளார். வாழ்க்கைக்கான அறங்கள் பலவற்றைக் கூறியிருக்கிறார்.

இனியவை நாற்பது

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான இனியவை நாற்பது என்னும் தூலில், நாற்பது வெண்பாக்கள் உள்ளன. நம் வாழ்விற்கு இன்பந்தரும் செயல்களை இனிய மொழியினில் கூறியிருப்பதால், இந்நூல் இங்ஙனம் பெயரிடப்பட்டிருக்க வேண்டும். இந்த நூலின் ஆசிரியர் பெயர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதந் சேந்தனார் ஆவார். பூதந்சேந்தனாரின் காலம் எட்டாம் நூற்றாண்டு, அதாவது 725 முதல் 750 வரை எனலாம். கடவுள் வாழ்த்து தவிர நாற்பது வெண்பாக்கள் உள்ளன.  இன்னா நாற்பது என்னும் நூலின் கருத்துகளை ஒட்டியே இவ்வெண்பாக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகத் தமிழாய்வாளர்கள் கருதுகின்றனர்.

இனியனவானவை

 ஒருவர் வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவது என்பது இயல்பு. இதனை விதி என்றும், சென்ற பிறவியின் பயன் என்றும் கூறுவர். இருப்பினும் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதற்கேற்ப, நாம் செய்யும் சில செயல்களே நமக்கு இன்பத்தையும், துன்பத்தையும் தருகின்றன. பிறருக்கு நல்லன செய்தால் நமக்கும் நன்மையே பயனாக விளையும். அங்ஙனம் நமக்கு இன்பம் தரும் சிலவற்றை எடுத்துக் கூறுவதில் திருக்குறளும் இனியவை நாற்பதும் எங்ஙனம் ஒன்றுபடுகின்றன என்று காணலாம்.

இல்லறமும், மக்கள் பேறும்

ஒருவன் தன் வாழ்வில் எத்தனை செல்வங்கள் பெற்ற போதும், அவனுடைய இல்வாழ்க்கை நிறைவுற அமைந்தால் மட்டுமே, அவனது வாழ்க்கை இன்பமாக அமையும்.

“அறமெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.” குறள் 49.

பிறரால் பழிக்கப்படாத இல்வாழ்க்கை அமைந்தால் அதுவே ஒருவன் வாழ்க்கையில் செய்த அறமாகும். அவன் இல்லாளும் மாண்புடையவளாய், அவனும் பிறன் இல் நோக்கானாய் வாழ்தல் வேண்டும். இந்தக் கருத்தை

இல்லதுஎன் இல்லவள் மாண்பானால் உள்ளதுஎன்

இல்லவள் மாணாக்கடை (53) என்ற குறளும்,

மனைவாழ்க்கை முன் இனிது மாணாதா மாயின் (பாடல் 2)

நிறைமாண்பில் பெண்டிரை நீக்கல் இனிதே (பாடல் 10)

என்ற இனியவை நாற்பது பாடல்களும்ம் கூறுகின்றன.

அது மட்டுமல்ல பெற்ற குழந்தைகளின் வளர்ச்சியை அருகிலிருந்து, அவர்தம் குரல் கேட்டு, அவர்களுடன் விளையாடி, மகிழ்ந்திருத்தல் இனிது. தாம் பெற்ற குழந்தைகள் நன்மக்களாக, நோயற்றவர்களாக இருக்க வேண்டும்.

குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே (பாடல் 12)

குழவி தளர்நடை காண்டல் இனிதே (பாடல் 14)

அவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே (பாடல் 14)

இவை இனியவை நாற்பது பாடல்கள். இதே போன்றே

மக்கள் மெய் தீண்டல் உடற்குஇன்பம் மற்றுஅவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. குறள் 65

குழலினிது யாழ்இனிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்.குறள் 66.

பொறையுடைமை மற்றும் புறங்கூறாமையும்

            பிறர் தனக்கு கெடுதல் செய்த போதினும், சுடும் தீச் சொற்கள் சொன்ன போதிலும், சினங்கொள்ளாது பொறுமையுடன் இருத்தல் எப்போதும் இனிமையே. தேவையின்றி சினம் கொண்டு, அவர்களைத் தண்டித்தால் அது அந்தக்கணம் மட்டுமே இனிமை தரும். ஆனால் அவன் பொறுத்துக் கொண்டால் வாழ்நாள் முழுதும் அவனுக்குத் துணையாக வரும். அதுபோல, பிறரைப்பற்றி இல்லாததும்,, பொல்லாததும் கூறாதிருத்தலும் இனிமை தரும். தமக்குத் தீங்கிழைத்தாரைப் பொறுத்துக் கொள்வதும், பிறரைப் புறங்கூறாதிருத்தலும் எஞ்ஞான்றும் இனிமை பயக்கும். இந்தக்கருத்தைத் திருக்குறள் கூறுகின்றது.

“ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்

பொன்றும் துணையும் புகழ்.” என்கிறது (குறள்.156)

“அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்

புறங்கூறான் என்றல் இனிது.”  (குறள் 181)

இந்தக் கருத்தைத் தான் இனியவை யாற்பதும் பின்வரும் பாடல்களில் விளக்குகின்றது.

எய்துங் திறத்தால் இனிதென்ப யார்மட்டும்

பொல்லாங் குரையாமை நன்கு. .05.

தெற்றென இன்றித் தெளிந்தாரைத் தீங்கூக்காப்

பத்திமையிற் பாங்கினியது இல். .32. 

ஈகை

            ஒருவன் வாழ்வில் நிறைவும், மகிழ்வும் பெற விரும்பினால் செய்ய வேண்டியவற்றுள் தலையானது தாம் ஈட்டியவற்றை பிறருக்கும் கொடுத்து, தானும் இன்புற வாழ்தலே ஆகும். பிறருக்கு ஈவதன் மூலம் அடையும் புகழானது இவ்வுலகில் நிலையானது ஆகும். பேகன், பாரி, காரி, ஓரி, அதியமான், ஆய். நல்லி ஆகியோர் தமிழ்நாட்டில் ஏழு வள்ளல்கள் என்று போற்றப்படுகின்றனர். மூவேந்தர்களுக்கு இணையாக அவர்கள் புகழ் பெற்றதன் காரணம் இவர்களது கொடைத்தன்மையே. தம் குடியின் பெருமையை உணர்ந்து, தம் மக்களுக்க வேண்டியனவற்றை வார் வழங்கியதன் மூலம் நிலையாப புகழ் பெற்று விளங்குகின்றனர். இத்தகைய ஈகைக்குணத்தைக் கொண்டிருத்தல் என்றும் வாழ்வில் இனிமை தரும் என்பதை இனியவை நாற்பது

உடையான் வழக்கினி தொப்ப முடிந்தால் இனிது. (பாடல் 2)

                        முட்டில் பெரும்பொருள் ஆக்கியக்கால் மற்றது

தக்குழி ஈதல் இனிது. (பாடல் 19) என்ற இரு பாடல்களின் மூலமும், திருக்குறள் ஈகை என்னும் அதிகாரம் மூலமும் விளக்குகின்றன. வறியார்க்கு ஈவதே ஈகை, தேவையற்றவர்களுக்கு ஈவது ஈகை யல்ல என்று தனது குறளின் மூலம் தெளிவுபடுத்திவிடுகிறார்.

ஒத்த கருத்து வரும் மேலும் சில இடங்கள்

            அறக்கருத்துகள் பலவற்றைக் கூறுமிடத்து திருக்குறளும், இனியவை நாற்பதும் ஒத்து வருகின்றன. சொற்களைக் கையாளும் வகையிலும் அவை ஒத்து வருகின்றன. அவை கீழ்க்கண்டவாறு,

“நாட்டார்க்கு நல்ல செயலினி தெத்துணையும்

ஒட்டாரை ஒட்டிக் கொளல் அதனின் முன்இனிதே” (பாடல் 17)

“நட்டார்க்கு நல்ல செயலான் விரைந்ததே

ஒட்டாரை ஒட்டிக் கொளல்“ (குறள் 679) என்று நண்பர்களுக்கு நன்மை செய்தும், அதேநேரம் பகைவர்களுக்கும் கூட வேண்டியன செய்து நட்பாக்கிக் கொண்டால் வாழ்வு இனிதாகும் என்று கூறுமிடத்தும்,

“ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரிதல் முன்இனிதே” (பாடல் 35)

“ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்

ஒற்றினால் ஒற்றிக் கொளல்.” (குறள் 588) என்று ஒற்றர்களின் தன்மையைக் கூறுமிடத்தும்,  

“மான மழிந்தபின் வாழாமை முன்இனிதே” (பாடல் 13)

“மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பின் மானம் வரின்” (குறள் 969)  என்று மானமிழப்பின் உயிர் நீப்பர் என்ற கருத்தினக் கூறுமிடத்தும்,

“நன்றிப் பயன்தூக்கி வாழ்தல் நனிஇனிதே” (பாடல் 30)

“பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலினும் பெரிது” (குறள் 103) என்று செய்த உதவியினை நன்றியுடன் நினைத்துப் பார்த்து வாழ்தல் இனிது. என்ற கருத்தினைக் கூறுமிடத்தும்,


“பிச்சைபுக் குண்பான் பிளிறாமை முன்இனிதே (பாடல்    39)

“இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை

தானேயும் சாலும் கரி.” (குற்ள 1060) என்று இரப்பவர்களுக்கான அறவொழுக்கத்தைக் கூறுமிடத்தும்,

“அறம்புரிந் தல்லவை நீக்கல் இனிதே” (பாடல் 21)

“அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின்” (குறள் 96) என்று அல்லதை நீக்கி, அறம் செய்து வாழ்தலின் இன்றியமையைக் கூறுமிடத்தும்,

“ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்இனிதே” (பாடல் 4)

“தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்

எங்ஙனம் ஆளும் அருள்” (குறள் 251) என்று புலால் மறுத்தல் பற்றி விளக்குமிடத்தும்.

                        “சொல்லுங்கால் சோர்வின்றச் சொல்லுதல் மாண்பினிதே” (பாடல் 34)

                        “ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்

                        காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு” (குறள் 642) என்று சொல்வன்மையின் சிறப்பு பற்றிக் கூறுமிடத்தும் இனியவை நாற்பதும் திருக்குறளும் பல அறக்கருத்துகளுடன் ஒத்து வருகின்றன.

பெரும்பாணாற்றுப்படை – ஐந்திணைகள்

முன்னுரை

“முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை

பெருகு வள மதுரைக் காஞ்சி - மருவினிய

கோல நெடுநல் வாடை கோல்குறிஞ்சிப்பட்டினப்

பாலை கடாத்தொடும் பத்து.”

எனப் புகழ்ந்து பாடப்படும் பத்துப்பாட்டில் நான்காம் பாடலான பெரும்பாணாற்றுப்படையில் ஐந்திணைகளும் பாடப்பட்டுள்ளன. பேரியாழ் கொண்டிருக்கும் பாணர் என்பதால் பெரும்பாணாற்றுப்படை என்னும் பெயர் பெற்றிருக்க வேண்டும். சிறுயாழைக் கொண்ட பாணர்களை ஆற்றுப்படுத்தும் நூல் சிறுபாணாற்றுப்படை என்றழைக்கப்படுகிறது.

இனி, பண்டைய தமிழ்நாடானது நிலத்தை அடிப்படையாகக் கொண்டு ஐவகையாகப் பிரிக்கப்பட்டு, அவை ஐந்திணை எனப்பட்டது. திணை என்பது ஒழுக்கமுமாகும்; நிலமுமாகும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பது அந்த ஐவகை நிலங்கள் ஆகும்.  இவற்றுள் பாலை என்பது தனி நிலவகை அல்ல. குறிஞ்சியும், முல்லையும் தனது தன்மையில் திரிந்து இருத்தலே பாலை ஆகும். முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்னும் முப்பொருளால் ஆனது திணை. இவற்றுள் முதற்பொருளாம் நிலமும், மூன்றாம் பொருளாம் உரிப்பொருளும் ஒருபோதும் திணைகளுக்குள் மயங்கி வராது. ஆனால் மற்ற கருப்பொருள்கள் திணைகளுக்குள் மயங்கி வருதல் உண்டு. இதுவே திணை மயக்கம் ஆகும். இங்ஙனம் நிலமானது, அவற்றின் தன்மையின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தோடு பிணையப்பட்டிருந்தது; இன்னமும் பிணைக்கப்பட்டுத்தான் இருக்கிறது, என்பதே உண்மையாகும்.

பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவனான தொண்டைமான் இளந்திரையனின் தலைநகரம் திருவெஃகா என்னும் காஞ்சிபுரம். அவனிடமிருந்து ஏற்கனவே பொன்னும் பொருளுமாய் பரிசில் பெற்ற புலவர்கள், தாம் காணும் மற்ற ஏழை பாணர்களை, “நீங்கள் இளந்திரையனைக்  காணச் செல்லுங்கள், அவன் உங்களுக்கு பொன்னும் பொருளும் அள்ளி அள்ளிக் கொடுப்பான். முதலில் நீர்ப்பெயற்று என்னும் காவிரிபூம்பட்டினத்திற்குச் சென்று, பின்னர் அங்கிருந்து அவனுடைய தலைநகரமாம் காஞ்சிபுரம் செல்லுங்கள். செல்லும் வழியெங்கும் அந்தந்த நிலத்திற்குரிய மக்கள் உங்களுக்கு வேண்டிய அளவு  உணவினையும், உதவியினையும் செய்வார்கள். மேலும் உங்களை அச்சுறுத்தும் கொடிய விலங்குகளிடமிருந்தும், பகைவர்களிடமிருந்தும் அவர்களே உங்களைக் காப்பர்” என்று ஆற்றுப்படுத்துகின்றனர். அங்ஙனம் அவர்கள் செல்லும் வழிகளைக் கூறுமிடத்து, வழியில் காணும் மக்களின் உணவு மற்றும் பழக்கங்கள், பறவைகள், விலங்குகள், மலர்கள், மரங்கள் என ஐந்திணைகளின் கருப்பொருள்கள் பலவற்றைத் தெளிவுபட அழகாக விளக்குகின்றார் நூலாசிரியர். நாமும் அவர் காட்டும் வழியில் ஒவ்வொரு திணையாக‍க் காண்போம்.  முதலில்

குறிஞ்சித்திணை.

            மலையும் மலை சார்ந்த இடமும் தான் குறிஞ்சித் திணை ஆகும். அதன் சிறுபொழுது நள்ளிரவும், பெரும்பொழுது குளிர்காலமும் ஆகும்.  அந்நிலத்திற்கான இறைவன் முருகன் ஆவான். குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்த ஆடவர் வெற்பன், சிலம்பன், குறவன் என்றும், பெண்டிர் கொடிச்சி, குறத்தி என்றும் அழைக்கப்படுவர். இந்நிலத்திலுள்ள ஊர்கள் சிறுகுடி என்று வழங்கப்படுகின்றன. மலை என்பதால் இங்கு அருவிகள் நிறைந்து காணப்படும். மேலும் புலி, கரடி, குரங்கு, யானை போன்ற விலங்குகளும், கிளி, மயில் போன்ற பறவைகளும் வாழும். குறிஞ்சி, காந்தள், வேங்கை போன்ற மலர் வகைகளும், பலா, அகில், சந்தனம் முதலான மரங்களும் காணப்படும். இங்கு வாழும் மக்களின் உணவுவகைகள் தினைமாவும், கிழங்குமாகும். இங்குள்ள மக்கள் தங்களின் தொழிலாக தினை விதைத்தல், கிழங்கு எடுத்தல், தேன் எடுத்தல் முதலியவற்றினையும், விளையாட்டுப் பழக்கங்களாக அருவி ஆடல் மற்றும், வெறியாடல் ஆகியவற்றையும் கொண்டுள்ளனர்.

            பெரும்பாணாற்றுப்படையில் புலி போத்து அன்ன புல் அணல் காளைஅதாவது புலி போன்ற குறுந்தாடியைக் கொண்ட ஆண்மகன் என்னும் அடியும், புலி குரல் மத்தம் ஒலிப்ப வாங்கிஅதாவது புலியின் ஒலியைப் போன்று ஒலியெழுப்பும் மத்தினைக் கொண்டு மோர் கடையும்...என்னும் அடியும் புலி என்னும் கருப்பொருளை சுட்டி வருகின்றன. மேலும் பிடி கணத்து அன்ன குதிர் உடை முன்றில்’, பெண்யானைகள்  கூட்டமாக இருப்பதைப் போன்று, நெற்குதிர்கள் உயரமாகவும் மிகுதியாகவும் வீட்டின் முன்றிலில்  இருக்கும், என்னும் அடியும், களிறு தாள் புரையும் திரி மரபந்தர் ஆண்யானையின் பெரிய கால்களைப் போன்ற திரிவைகள் கொண்ட மரப்பந்தல் உள்ள வீடுகள் என்னும் அடிகள் யானையினைப் பற்றிக் கூறுகின்றது.  வண்ண கடம்பின் தறுமலர் அன்ன அதாவது கடம்ப மரத்தின் மணம் மிகுந்த மலர்களைப் போல என்பதில் கடம்ப மரத்தின் பூக்களும்,

அவல் எறி உல்க்கை பாடு விறந்து அயல

கொடுவாய் கிள்ளை படுபகை வெரூஉம் அவல் இடிக்கும் உலக்கையின் ஓசையில், வளைந்த வாயினை உடைய கிளிகள், தம்மை விரட்டும் ஓசையோ என்றெண்ணி வெருண்டோடுமாம், என்பதில் கிளியும் பாடப்படுகின்றது.

மழை விளையாடும் கழைவள் அடுக்கத்து

அணங்கு உடை யாளி தாக்கலின் பல உடை

கணம் சால் வேழம் கதழ்வுற்று ஆஅங்கு

எந்திரம் சிலைக்கும் துஞ்சா கம்பலை

அதாவது, மழைமேகங்கள் விளையாடுமளவு உயர்ந்த மூங்கில்கள் கொண்ட மலையடுக்கத்தில், அச்சமூட்டும் யாளி என்னும் விலங்கு தாக்குவதால், ஒன்றாகக் கூட்டமாயுள்ள யானைகள் கதறுவதைப் போல, ஆங்கே கரும்பு அரைக்கும் எந்திரம் எழுப்பும் ஓசை விடாது கேட்ட வண்ணம் இருக்குமாம். இதில் யாளி என்னும் விலங்கினைப் பற்றி ஒரு செய்தியையும் நமக்குத் தருகிறார். இப்படி குறிஞ்சித் திணைக்குரிய பல கருப்பொருள்களும் பெரும்பாணற்றுப்படையில் தென்பட்ட வண்ணம் உள்ளன.

முல்லைத்திணை

அடுத்தது முல்லைத்திணை. காடும், காடு சார்ந்த நிலமும் முல்லைத் திணை ஆகும். இதனுடைய சிறுபொழுது மாலைநேரமாகும். பெரும்பொழுது மழைக்காலம் ஆகும்.  இந்நிலத்தின் இறைவன் திருமால் ஆவார். இங்கு வாழும் மக்கள் ஆயர், ஆய்ச்சி என்றும், இடையர், இடைச்சி என்றும் அழைக்கப்படுவர். பாடி என்பது இங்ங்குள்ள ஊர்களின் பெயராகும். காட்டாறு பாயும் நிலம் முல்லைநிலம். ஆங்காங்கே குறுஞ்சுனைகளும் காணப்படும். காட்டுக்கோழியும், மான், முயல், ஆடு, மாடு போன்ற விலங்குகளும் வாழும். கொன்றை, குருந்தம், காயா போன்ற மரவகைகளும், முல்லை, பிடவம், தோன்றி முதலான மலர் வகைகளும் இங்கு காணப்படும். வரகு, சாமை இந்நிலத்தின் உணவு வகைகள். ஆதலால் சாமை, வரகு விதைத்தல் போன்ற தொழில்களும், ஆநிரைகள் வளர்ப்பதினால் குழலூதுதலும், ஏறு தழுவுதலும் பழக்கங்களாகவும் உள்ளன.

முல்லை நிலத்தின் தெய்வமான திருமாலைப் பற்றி பெரும்பாணாற்றுப்படையில் மூன்று முறை குறிப்பிடப்படுகிறது,

மாபெரும் நிலத்தைக் கடந்த, திருமகளை மார்பிலே கொண்ட, ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் என்ற மூவகை நீர்கள் கலந்து உருவான  கடலின்  வண்ணமுடைய திருமாலின் வழித்தோன்றியவன் என இளந்திரையனைப் புகழும் போதும்,

நீலநிற உரு கொண்ட நெடியோனாகிய திருமாலின் கொப்பூழில் தோன்றிய நான்முகனைத் தந்த பல இதழ் கொண்ட தாமரைப்பூ என தாமரைப்பூவைப் பற்றி பாடும்போதும்,

நூலோர் எல்லாம் புகழ்ந்த மாட்சிமை கொண்ட திருமாலின் கடலிலுள்ள சங்கைப் போன்று, வெண்ணிற வால்மயிர் கொண்ட குதிரைகள் என்று குதிரைகளின் வெண்ணிறத்தை சங்கோடு ஒப்பிடும் போதும் ஆகிய மூன்று இடங்களில் திருமாலைப் பற்றிக் குறிப்புகள் வருகின்றன.

முல்லை நில மகளிரான ஆயர்மகளைப் பற்றிப் பாடும்போது, புலி போன்று ஒலியெழுப்பும் வண்ணம் மத்தினைக் கொண்டு மோர் கடைவாள். அப்போது காளானின் வெண்ணிற மொட்டுகள் கூம்பு விரிப்பது போன்று உறைந்த இனிய சுவையுடைய நுரை போன்ற வெண்ணெய் எடுப்பாளாம். மோர்த்துளி தெறித்ததால் புள்ளி புள்ளியாய் விளங்கும் பானையை, சும்மாடு வைத்து நாள்தோறும் மோர் விற்பாளாம். நல்ல மாநிற மேனியுடைய அவள், காதிலே சிறிய குழைகளும், மூங்கில் போன்ற தோள்களும், குறுகிய சுருள்கள் கொண்ட கூந்தலும் கொண்டிருப்பாள். மோர் விற்ற பணத்தில் நல்ல உணவு சமைத்து சுற்றத்தோடு அருந்துவாள். நெய் விற்ற பணத்திலோ பொன்னும் பொருளும் வாங்காது, எருமை மாட்டினையும், பசு மாட்டினையும், கன்றுகளையும் வாங்கி வருவாள். என குறிப்புகள் தருகின்றார்.

முல்லை நில ஆடவர் இடையர் எனப்பட்டனர். அவர்கள், பசுவினை ஓட்டும் தடி கொண்ட கையினையும், கோடரி ஏந்திய கையினையும், உறிப்பானைகள் கட்டப்பட்ட காவடி தொங்குவதால் வடு படிந்த தோள்களையும், பால் கறக்கும் கைகைளைத் தடவுவதால் ஈரம் தடவிய மயிரும் கொண்டிருப்பர். கிளையிலும், கொடியிலும் பூத்த மலர்களை விரவி, இன்னும் பல மலர்கள் தொடுத்து கட்டிய கண்ணி மாலையும் அணிந்திருப்பா். அவன் நல்லுடை அணிந்திருப்பா். பால் சோற்றை உண்ணுவா். செந்நிறத்தில் துளையிட்டு செய்த கரிய துளை கொண்ட குழல் கொண்டு பாலைப்பண் வாசிப்பா். அது சலித்து விட்டால் குமிழ மரத்தில் மரல் என்னும் குரும்பை நாரினை, தரம்புகளாக்கி செய்த வில்யாழினைக் கொண்டு குறிஞ்சிப்பண் வாசிப்பராம். இதனைக் கேட்ட வண்டுகள் தம் சுற்றத்தினரின் குரலோ என்று மயங்கி நிற்குமாம்என்று அழகுபட விவரிக்கின்றார். இங்ஙனம் முல்லைத்திணையின் கருப்பொருள்களான மலர்களும், விலங்குகளும், மக்களும், அவர்தம் தொழிலும், என பல குறிப்புகள் பாடலில் உள்ளன.

மருதத்திணை

வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதநிலம் ஆகும். இந்நிலத்தின் சிறுபொழுது வைகறை; பெரும்பொழுது கார்காலம் முதலான ஆறு காலமும் கொண்டது. இந்நிலத்தின் இறைவன் இந்திரன் ஆவான். இங்கு வாழும் மக்கள் உழவன், உழத்தியர், கடையன், கடைசியர், ஊரன், மகிழ்நன் என்று அழைக்கப்படுவர். இந்நிலத்தின் ஊர் பேரூர், மூதூர்  என்றழைக்கப்படும். வயல் சார்ந்த நிலம் என்பதால் ஆறுகளும், கிணறுகளும் நிறைந்திருக்கும். இங்ஙனம் நீர்நிலைகள் உள்ளதால், தாமரை, குவளை போன்ற மலர்களும், அன்னம், நாரை போன்ற பறவைகளும் காணப்படும், எருமை மாடுகள் மேயும். காஞ்சி, வஞ்சி, மருதம் போன்ற மரவகைகள் காணப்படும். நெல்அரிசி இவர்களின் உணவாகும். உழவுத் தொழில் இன்றியமையான தொழிலாகும். களை எடுத்தல், அரிதல் இவையும் உழவோடு தொடர்புடையன. கடா விடல், விழாச்செய்தல், புதுநீர் ஆடுதல் இவர்களின் பழக்கங்களாகும்.

இனி பெரும்பாணாற்றுப்படையில், மருத நிலத்தைப் பற்றிப் பாடும் போது,

செழுங்கன்று யாத்த சிறுதாள் பந்தர்

பைஞ்சேறு மெழுகிய படிவ நல்நகர்

மனையுறை கோழியொடு ஞமலி துள்ளாது

அதாவது அழகான நல்நகரிலுள்ள, கொழுத்த கன்றினைக் கட்டிய சிறிய கால்களுடைய பந்தலையும், பசிய சாணத்தால் மெழுகிய வீடுகளில்  கோழிகளோடு நாய்கள் பொருந்தியிராது.

மேலும் வண்டல் என்னும் விளையாட்டு விளையாடும் பெண்களோடு, நீர் அருந்தும் நீர்த்துறையில் கூடி நீராடும் பேண்களும் கரையில் கழட்டி வைத்த அழகிய காதணிகளை , இரை தேடும் மணிச்சிரல் என்னும் பறவை பொன்மீன் என்றெண்ணி கொத்திச் செல்லுமாம்.

இன்னும் அழகாக நீந்துவதற்கேற்ற நெடிய நீர்நிலையில் தீ போன்று சிவந்து மலர்ந்திருக்கும் செந்தாமரை பூவினடம் செல்லாது, அங்கிருக்கும் தாமரைத் தண்டுகளை நீக்கி, அகன்ற வானில் குறைவில்லாய் தோன்றும் வானவில்லினைப் போன்றிருக்கும் அரக்கு வண்ண இதழ் கொண்ட குவளைப் பூக்களோடு, நீல மலர்களும் மலர்ந்திருக்கும். இவற்றோடு மாறுபட்ட மலர்கள் நிறைந்த முதுநீர் பொய்கையில் களைபறிப்போர் கொடுத்த மொட்டுவிட்ட பல மலர்களையும் கட்டி, விழாக்கள் அமைந்து வரும் நாளில் நீவிர் மாலையாக அணிந்து கொள்வீராக என பாணர்களிடம் மற்ற பாணர்கள் கூறுவதாக சொல்லுமிடத்து, மருத்த்திணையின் கருப்பொருள்கள் பலவற்றைப் பற்றி நூலாசிரியர் குறிப்புகள் கூறுகின்றார்.

நெய்தல்திணை

            நான்காம் வகையான நெய்தல் நிலம் கடலும் கடல் சார்ந்த இடமாகும். இந்நிலத்தின் சிறுபொழுது பிற்பகல்; பெரும்பொழுது - கார்காலம் முதலான எல்லாக் காலமும். இங்கு வருணன் தெய்வமாக தொழப்படுகிறார். இங்கு வாழும் மக்கள் பரதவர், பரத்தியர் என்றும், நுளையர் நுளைச்சியர் என்றும் அழைக்கப்படுவர். கடல் சார்ந்த நிலம் என்பதால் கடற்காகம் பொன்ற பறவைகளும், சுறா மீன் போன்ற கடல்வாழ் விலங்குகளும் காணப்படும். இந்நிலத்தின் ஊர்கள் பாக்கம், பட்டினம்  எனப்படுகின்றன. இங்கு கடலோடு உவர்நீர்க்கேணிகளும் உண்டு. தாழைமலரும் நெய்தல் மலரும், புன்னை மற்றும் ஞாழல் மரங்களும் காணப்படும். மீன் பிடித்தல், உப்பு உண்டாக்கல், இவற்றினை விற்றல் இவர்களின் தொழில். மேலும் கடல் ஆடல் இவர்களின் பழக்கமாகும்.

            முதலில் நீர்ப்பெயற்று என்னும் துறைமுக நகரிலுள்ள கலங்கரை விளக்கத்தைப் பற்றி வானை முட்டுகின்ற, கூரை வேயாத மாடம் கொண்ட வானையே தாங்கிப் பிடிக்கும் தூண் போல அமையப்பெற்று, அதில் இரவு முழுதும் எரியும் விளக்கும் ஏற்றபட்டு இருக்கும். இரவில் கடலில் வரும் கலங்களை கரைக்கு அழைத்தபடி நிற்கும் கலங்கரை விளக்கம் என்று பாடுகிறார்.

            நெய்தல் நிலப் பெண்களான எயிற்றியர் நுண்ணிய புல்லினை வாயில் அடக்கி, வெண்ணிற பல் கொண்டிருப்பர். இவர்கள் உலக்கையால் குத்திய அரிசியை, நீரினை ஊற்றி உடைந்த பானையில் போட்டு, உடைந்த அடுப்பில் வைத்துச் சமைப்பர். நெய்தல் நிலம் என்பதால் இந்த நீரானது உப்புச் சுவை கொண்ட உவரியிலிருந்து எடுக்கப்பட்டிருக்கும். அதனுடன்  வெட்டாமல், வாட வைத்த மீன் அதாவது கருவாட்டை உடனிட்டு சமைப்பர். இங்ஙனம் பார்த்து பார்த்து சமைத்த உணவினை, வாடாத தும்பை மலரும், வீர‍ர் போற்றும் கழலும் அணிந்தவனும், சிவந்த மலையும் உடைநவனுமாகிய தமது அரசனைக் காண வந்தவர்கள் நீவிர் என்று அறிந்தவுடன், மருத நில இஐவனான வருணனிக்குப் படைப்பது போல உங்களுக்குப் படைப்பர். நீங்களும் உண்டு பின் அங்கிருந்து செல்லலாம்.

பாலைத்திணை

குறிஞ்சி, முல்லை இவையிரண்டுக்கும் இடையில் அமைந்த பாழ் நிலம் பாலை எனப்பட்டது. இந்நிலத்தின்  சிறுபொழுது நண்பகல். பெரும்பொழுது வேனில், பின்பனி ஆகும். இந்நிலத்தின் தெய்வம் கொற்றவை ஆகும். இங்கு வாழும் மக்கள் எயினர், எயிற்றியர், மறவரன், மறத்தி என்று வழங்கப்பட்டனர். பாலை நிலம் என்பதை பாழ்பட்ட நிலம் என்பதால் அவர்களின் தொழில் பகற்சூறை மற்றும் வழிப்பறி ஆகும். இங்ஙனம் கிடைப்பதே இவர்களுக்கு உணவும் ஆகும். புறா, பருந்து, கழுகு போன்ற பறவைகளும், செந்நாய் போன்ற விலங்குகளும், உழிஞை, பாலை, ஓமை போன்ற மரங்களும், கரவம், மரவம் போன்ற மலர்களும் காணப்படுகின்றன. இந்நிலத்தின் ஊர்கள் குறும்பு என்றழைக்கப்படுகின்றன.

            பாலை நிலம் பற்றி பெரும்பாணாற்றுப்படையில் விளக்கும் போது, எயினர்கள், கொடிய வில்லேந்துபவர் எனினும், அவர்களின் விருந்தோம்பல் சிறப்பாக இருக்கும் என்கிறது. அவர்களின் ஊரான குறும்பில் காணக்கிடைக்கும் காட்சிகளாக புலவர் விளக்கும் போது பாலைக்குரிய கருப்பொருள்கள் பல வெளிப்பட்டு நிற்கும்.

            நீரின்றி மயங்கிக் கிடக்கும் மான்; வான் பொழியாததால் நீர் வேண்டி தோண்டப்பட்ட குழிகள், அகழிகள் சூழ்ந்த பள்ளங்களில் உள்ளே ஒளிந்து ஒடுங்கி இருக்கும் அகத்திப் பூ போன்ற கொம்புகளை உடைய பன்றிகள்; இவற்றின் வரவை எதிர்நோக்கி வேட்டையாடக் காத்திருக்கும் வேட்டை நாய்கள் வைத்திருக்கும் மக்கள்; இரவு வேட்டையில் ஒன்றும் கிட்டாத்தால் பகல் நேரத்திலாவது ஏதாவது கிட்டுமா என்று வலைகளைத் தொடர்ச்சியாக மாட்டி வைத்திருக்கும் காட்சி; அவ்வழியே செல்லும் நீண்ட செவியினை உடைய முயல்கள் இவ்வலைகளில் மாட்டிக் கொள்ளுதல்; எல்லாவ்றையும் விட உடலையுண்ணும் பருந்து’, என யாருமற்ற பாலை நிலத்தில் அந்நிலத்தின் கருப்பொருள்கள்  பலவற்றைக் கூறுகின்றார்.

            மேலும் யாருமற்ற நிலத்தைக் கடந்து, குறும்பு எனப்படும் பாலைநில மக்களின் ஊருக்குள் வந்தால், நீண்ட, கூரிய, வலிய ஆயுதங்கள் அடுக்கப்பட்ட வாயில்கள் கொண்ட வீடுகள் இருக்கும். கொடிய பாலை நில்தவர் எனினும் ஆரசனைக் காண வந்தோர் என்றால் அவர்களின் விருந்தோம்பல் இன்னும் செம்மையாக வெளிப்படும். சூல் கொண்ட உடும்பின் வறுவல், விட்டிலே சமைத்த கள், கவர்ந்த ஆநிரைகளை விற்று வந்த பணத்தில் வாங்கி வந்த கள் என எல்லவாற்றையும் தாமும் உண்டு, உங்களுக்கும் அளிப்பர்.  

முடிவுரை

    இங்ஙனம் ஐந்திணைகளுக்குரிய கருப்பொருகள்களைப் பற்றி பெரும்பாணாற்றுப்படை முழுதும் குறிப்புகள் கொடுத்தவண்ணம் உள்ளார் உருத்திரங்கண்ணனார். இளந்திரையனின் கொடைத்திறத்தைப் பாடினாலும் எளிய மக்களின் வாழ்வியலையும் மிக அழகாக பதிவு செய்துள்ளார். எல்லா நிலங்களையும் கடந்து, இளந்திரைனை எளிய பாணர்கள் சென்றடையும் போது, இதுவரை தாங்கள் பெற்று மகிழ்ந்திருந்த விருந்தோம்பலும், உணவும், பரிசிலும் மறந்து விடுமளவு இளந்திரையனின் கொடைத்திறம் இருக்குமாம். புத்தாடை உடுக்கச் செய்து, உணவளித்து, தேர் நிறைத்து பரிசிலும், மேற்கொண்டு புரவிகளும் யானைகளும் தருவான் இளந்திரையன் என்று பாடலை நிறைவு செய்கிறார் ஆசிரியர்.

 


அசைகள், சீர்கள்

அசைகள் என்றால் என்ன?

English syllable is அசை.


ஓரசை

இந்த ஓரசைகளை இரண்டு வகைப்படுத்தலாம்.

நேரசை மற்றும் நிரையசை.


1. குறில் எழுத்து மட்டும் தனியாக வந்தாலோ...

குறிலுடன் ஒற்று சேர்ந்து வந்தால் அது ஒரேஒரு அசை கொண்டது.

அதாவது ஓரசை. 

(எ.கா)

மண், பொன், கல் மெய். க,வ,ப. 

இது நேரசை


2. அதைப்போல நெடில் எழுத்து மட்டும் தனியாக வந்தாலோ...

நெடிலுடன் ஒற்று சேர்ந்து வந்தால் அதுவும் ஒரேஒரு அசை கொண்டது.

அதாவது ஓரசை. 

(எ.கா)

கை, மை, வாய், நாள், நாம்.

இது நேரசை.


3.மேலும் இரண்டு குறில் இணைந்து  வந்தாலோ...

அவற்றுடன் ஒற்று சேர்ந்து வந்தால் அதுவும் ஒரே ஒரு அசை கொண்டது.

அதாவது ஓரசை. 

(எ.கா)

சட, படம், *மலர்*, மணம், புயல்

இது நிரையசை.


4.மேலும் ஒரு குறிலெழுத்துடன் ஒரு நெடில் இணைந்து  வந்தாலோ...

அவற்றுடன் ஒற்று சேர்ந்து வந்தால் அதுவும் ஒரே ஒரு அசை கொண்டது.

அதாவது ஓரசை. 

(எ.கா)

துணை, கடாம், மழை, குழாம், 

இதுவும் நிரையசை

 இதுதான் அடிப்படை பாடம். நன்கு புரிந்து கொள்ளவும்.


அசைகள் சேர்ந்துதான் சொற்கள் அல்லது சீர்கள் உண்டாகுகின்றன.


ஈரசைச் சொற்கள்

எ.கா

இல்லறம் -  இச்சொல்லில் இரண்டு அசைகள் உள்ளன. 

இல் + லறம்.

*இல்* என்பது ஓரசை. 

இது நேரசை

*லறம்* என்பதும் ஓரசை.

இது நிரையசை.


இனி வாய்ப்பாடு..

மாச்சீர்கள்

நேர் × நேர் - தேமா 

(எ.கா) - காசு

நிரை × நேர் - புளிமா

(எ.கா) - பிறப்பு.


விளம்சீர்

நேர் × நிரை - கூவிளம்

நிரை × நிரை -  கருவிளம்


அடுத்து மூவசைச்சீர்.

அது காய்ச்சீர், கனிச்சீர் என இரண்டு வகைப்படும்.

நான்கு காய்ச்சீரும்

நான்கு கனிச்சீரும் உண்டு.


அடுத்து நாலசைச்சீர்.

அது தண்பூச்சீர்

நறும்பூச்சீர்,

தண்ணிழல்சீர்

நறும்நிழல்சீர்,

 என நான்கு வகைப்படும்.


நான்கு தண்பூச்ச்சீரும்

நான்கு நறும்பூச்சீரும்

நான்கு தண்ணிழல்சீரும்

நான்கு நறும்நிழல்சீரும்

 உண்டு.


தமிழ்ச்சொற்களில் நான்கசைச்சொற்கள் வருவதே அரிது.

ஐந்தசை சீர்கள் வராது.

(எனக்குப் புரிந்த வகையில்)


 ஆக....

இரண்டு - ஓரசைசீர்கள்

அதாவது

1.நேர் 

2.நிரை


நான்கு - ஈரசைச்சீர்கள்

மாச்சீர்

1.நேர் நேர் - தேமா 

2.நிரை நேர் - புளிமா

விளம்

3.நேர் நிரை  - கூவிளம்

4.நிரை நிரை - கருவிளம்


எட்டு - மூவசைசீர்கள்

காய்ச்சீர் - 4

1.நேர் நேர் நேர் - தேமாங்காய்

2.நிரை நேர் நேர் - புளிமாங்காய்

3.நேர் நிரை நேர் - கூவிளங்காய்

4.நிரை நிரை நேர் - கருவிளங்காய்

கனிச்சீர் - 4

5. நேர் நேர் நிரை - தேமாங்கனி

6. நிரை நேர் நிரை - புளிமாங்கனி

7. நேர் நிரை நிரை - கூவிளங்கனி

8. நிரை நிரை நிரை - கருவிளங்கனி


பதினாறு - நான்கசை சீர்கள்

தண்பூச்சீர் - 4

1.நேர் நேர் நேர் நேர் - தேமாந்தண்பூச்சீர்

2.நிரை நேர் நேர் நேர் - புளிமாந்தண்பூச்சீர்

3.நேர் நிரை நேர் நேர் - கூவிளந் தண்பூச்சீர்

4.நிரை நிரை நேர் நேர் - கருவிளந் தண்பூச்சீர்

நறும்பூச்சீர் - 4

5. நேர் நேர் நிரை நேர் - தேமாநறும்பூச்சீர்

6. நிரை நேர் நிரை நேர் - புளிமாநறும்பூச்சீர்

7. நேர் நிரை நிரை நேர் - கூவிளம்நறும்பூச்சீர்

8. நிரை நிரை நிரை நேர் - கருவிளம்நறும்பூச்சீர்

தண்ணிழல்சீர் - 4

9.நேர் நேர் நேர் நிரை - தேமாந்தண்ணிழ்சீர்

10.நிரை நேர் நேர் நிரை - புளிமாந்தண்ணிழல்சீர்

11.நேர் நிரை நேர் நிரை - கூவிளந்தண்ணிழல்சீர்

12.நிரை நிரை நேர் நிரை - கருவிளந்தண்ணிழல்சீர்

நறுநிழல்சீர் - 4

13. நேர் நேர் நிரை நிரை - தேமாநறுநிழல்சீர்

14. நிரை நேர் நிரை நிரை - புளிமாநறுநிழல்சீர்

15. நேர் நிரை நிரை நிரை - கூவிளம்நறுநிழல்சீர்

16.. நிரை நிரை நிரை நிரை - கருவிளம்நறுநிழல்சீர்


 குறிப்பு

வெண்பாக்களில்  ஈற்றுச்சீர்(கடைசிசீர்) எப்போதும் ஓரசை அல்லது ஈரசை மட்டும் தான் வர வேண்டும்.


அதனால்தான்

நாள்

மலர் 

காசு 

பிறப்பு என்று கூறுகிறோம்.


இனி வெண்பா வாசித்தால் ஈற்றுச்சீரின் வாய்ப்பாடு என்ன என்பதை முதலில் கண்டறிவோம் ..

இதுதான் அசை..


ஏழு அகத்திணைக்காதல்களில் பெருந்திணைக்காதல்

             சங்க இலக்கியங்கள் சுட்டும் ஏழு அகத்திணைக் காதல்களில், ஏழாம் அகத்திணைக்காதல் பெருந்திணையாகும். பெயரைப் பார்க்கும் ஏதோ பெருமை மிகு காதல் என்ற எண்ணம் வருகிறதா? எனில் அது முற்றிலும் தவறு. பெருந்திணைக் காதல்  என்றாலே பொருந்தாக் காதல் அல்லது பொருந்தாக் காம‍ம் ஆகும். இது மக்களால் இயல்பாக ஏற்றுக் கொள்ளப்படாத, ஒரு இழிவான காதலாகவே பார்க்கப்படுகிறது. இத்தகைய காதலைத் தற்காலத்தில் நிறைய காண்கிறோம். ஆனால் சங்க காலத்திலும் கூட இத்தகைய காதல்கள் இருந்திருக்கிறன  என்பது வியப்பிற்குரிய செய்தி அல்லவா? எட்டுத் தொகை நூல்களுள் ஆறு தொகை நூல்கள் அகவாழ்வு பற்றி பாடுகின்றன. இருந்தும் அவற்றுள் கலித்தொகை மாத்திரமே பெருந்திணைப் பாடல்களைப்  பாடுகின்றது. ஆனால் புறம் பாடும் புறநானூற்றில் ஐந்து பாடல்கள் பெருந்திணைப் பாடல்களாக வருகின்றன. தலைவன் தலைவியின் அகவாழ்வு பற்றி பாடினாலும், புலவர் அவர்களின் பெயர்களை வெளிப்படையாகச் சுட்டினால் அது புறப்பாடலில் வைக்கப்படும்.

 இதில் இன்னும் வியப்பு என்னவெனில், இத்தகைய மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாத பெருந்திணைக் காதல்கள் எவைஎவை என தொல்காப்பியர், இலக்கணமே வகுத்துள்ளார். தொல்காப்பியத்தில் அகத்திணையியலில் 56ம் பாடல் இது.

ஏறிய மடல்திறம் இளமை தீர்திறம்

தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்

மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்

செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே!

அதாவது மடலேறும் காதல், இளமை தீர்ந்தபின் வரும் காதல், ஆராயாது வெளியிடும் பெருங்காமம், காம‍ம் மிகுந்ததால் செய்யும் தகா செயல்கள் இந்நான்கும் தொல்காப்பியம் காட்டும் பெருந்திணையின் வகைகள் ஆகும். இனி ஒவ்வொரு வகையாகப் பார்க்கலாம்.

1. முதலில் ஏறிய மடல்திறம். அதாவது மடலேறி தன் காதலை வெளிப்படுத்துதல்.

கைக்கிளைத் திணையில் தலைவன் மடலேறப் போவதாகக் கூறி, தலைவியை அச்சுறுத்துவான். ஆனால் பெருந்திணையிலோ மடலேறியே விடுகிறான். மடலேறுதல் என்பது பனை மரமட்டையின் அடியினைக் கொண்டு, குதிரை போன்ற சிலை ஒன்றை வடித்து, அதன் மேல் தலைவன் அமர்ந்திருப்பான். ஊரார் அந்த பாவைக் குதிரையை இழுத்தபடி ஊர் முழுதும் சுற்றி வருவார்கள். அதன்மேல் அமர்ந்திருக்கும் தலைவன், தனது உடம்பில் சாம்பலை பூசி பூவிளைப்பூ, எருக்கம்பூ, ஆவாரம்பூ இவற்றாலான மாலையை அணிந்து  கொண்டு. தன் காதலியின் வரைந்த ஓவியத்தைக் கையில் பிடித்தபடி வலம் வருவான். இதன் மூலம் தன் காதலை ஊராரருக்கும், காதலிக்கும் வெளிப்படையாக அறிவிப்பான். இதுவே சங்ககாலங்களில் மடலேறுதல் என வழங்கப்பட்டு வந்தது. ஒருமுறை மடலேறிய பின்பும் தன் காதல் நிறைவேறவில்லை என்றால் மறுமுறையும் மடலேறி விட்டு தன் வாழ்க்கையை முடித்துக்கொள்வான். எனவே இது பொருந்தாக் காதலில் சேரும்.

இதைப் பற்றி கலித்தொகையில் நெய்தற்கலியில் 138ம் பாடலில் பாடுகிறார் புலவர் நல்லந்துவனார்.

 (பாடல் அடிகள் 8 முதல் 17 வரை...)

மணிப் பீலி சூட்டிய நூலொடு, மற்றை

அணிப் பூளை, ஆவிரை, எருக்கொடு, பிணித்து, யாத்து,

மல்லல் ஊர் மறுகின்கண் இவட் பாடும், இஃது ஒத்தன்

எல்லீரும் கேட்டீமின் என்று

படரும் பனை ஈன்ற மாவும் சுடர் இழை,

நல்கியாள், நல்கியவை

பொறை என் வரைத்து அன்றி, பூநுதல் ஈத்த

நிறை அழி காம நோய் நீந்தி, அறை உற்ற

உப்பு இயல் பாவை உறை உற்றது போல,

உக்குவிடும் என் உயிர்

 

இதன் விளக்கம்..

தலைவன் நீல மயிலின் பீலி, பூளாப்பூ, ஆவாரம்பூ, எருக்கம்பூ ஆகியவற்றை நூலில் கோத்துக் கட்டிய மாலை அணிந்துகொண்டு, ஊர்த் தெருவில் தலைவியின் பெயரைச் சொல்லிப் பாடிக்கொண்டு வருகிறான். ஊரார் இவனைக் கேலி செய்கின்றனர். ஆனால் அவனோ

“எல்லாரும் இதனைக் கேளுங்கள் - என் நெஞ்சத் துன்பமும், இந்த மடல் குதிரையும்தான், இழையணிந்த என் தலைவியானவள் எனக்குத் தந்தவை. என்னுடைய பொறுமையோ கட்டுக்குள் இல்லை. பூப்போன்ற நெற்றி கொண்டவள் எனக்குக் கொடையாக நல்கிய காம நோய் இது. பாறை மேல் இருக்கும் உப்பால் செய்த பொம்மை மழையில் நனைந்து உருகுவது போல என் உயிர் உருகுகிறது. “ என்று புலம்பியபடியே மடலேறி வருகிறான். அவள் ஒத்துக்கொண்டால், திருமணத்திலும், அவள் மறுத்தால் அவனது மரணத்திலும் முடியும் இத்தகு காதல் பொருந்தாக் காதல் வகையாகும்.

 


2. அடுத்ததாக இளமை தீர்திறம். அதாவது இளமை தீர்ந்தபின் வரும் காதல்.

இது மேலும் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது.

அ. தலைவன் முதியவனாக, தலைவி இளையவளாக இருந்து வரும் காதல்.

ஆ. தலைவன் இளையவனாக, தலைவி முதியவளாக இருந்து வரும் காதல்.

இ. அல்லது இருவருமே முதியவர்களான பிறகு தோன்றும் காதல்.

இவ்வகைக்கு சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளனவோ இல்லையோ, இன்றும் வளைகுடா நாடுகளில் வேலைக்குச் சென்று, இளமை முழுதும் தொலைத்த பின்பு, முதுமையில் இல்லறம் நடத்த தாய்நாடு திரும்புபவர்களின் காதலும் பொருந்தாக் காதலுக்கான சான்றுதானே!

 

3. அடுத்ததாக ஆராயாமல், தெளிவற்ற உள்ளத்தோடு வெளிப்படுத்தும் காம‍ம். இது பெரும்பாலும் தலைவிக்கு உரிய காதல்வகையாகும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய பண்புகளைத் தன்னிடம் ஒருங்கே கொண்ட ஒரு பெண், தனது காமத்தை, ஊரார் அறிய வெளிப்படுத்த மாட்டாள். ஆனால் காமத்தீ தன்னைச் சுட்டெரிப்பதால், அப்பண்புகளையும் மீறி வெளிப்படுத்துகிறாள் எனில் அது பொருந்தாக் காம‍ம் ஆகும். இதற்கு சான்றாக கலித்தொகையில் வரும் 142ம் பாடலைக் கூறலாம்.

(பாடல் அடிகள் 1 – 5 வரை)

புரிவுண்ட புணர்ச்சியுள் புல் ஆரா மாத்திரை,

அருகுவித்து ஒருவரை அகற்றலின், தெரிவார்கண்,

செய நின்ற பண்ணினுள் செவி சுவை கொள்ளாது,

நயம் நின்ற பொருள் கெடப் புரி அறு நரம்பினும்

பயன் இன்று மன்றம்ம, காமம் இவள் மன்னும்   5

திருமணம் ஆகி முதலிரவு அன்றே தலைவன் தலைவியை பிரிய நேரிட்டது. இதனைக் கண்டவர் கலக்கத்துடன் சொல்கின்றனர். யாழில் பண்ணிசைக்கும் தொடங்கும் போது, யாழின் நரம்பு அறுபட்டு, செவிக்குச் சுவை கிட்டாததைப் போல, தலைவியின் காமம் பயனின்றி போய்விட்டது. அவளுடன் கூடியிருக்கும் சுற்றத்தாரால் விளையும் இன்பம் உண்டோ? அவர்களால் இவளுக்கு வரும் பயன்தான் என்ன?

காம‍த்தை அடக்கவியலா தலைவி பின்வருமாறு புலம்புகிறாளாம்.

(பாடல் அடிகள் 15 – 23 வரை)

என்று, எல்லீரும் என் செய்தீர்? என்னை நகுதிரோ?    15

நல்ல நகாஅலிர் மற்கொலோ யான் உற்ற

அல்லல் உறீஇயான் மாய மலர் மார்பு

புல்லிப் புணரப் பெறின்.

'எல்லா! நீ உற்றது எவனோ மற்று?' என்றீரேல், 'எற் சிதை

செய்தான் இவன்' என, 'உற்றது இது' என,   20

எய்த உரைக்கும் உரன் அகத்து உண்டாயின்,

பைதல ஆகிப் பசக்குவமன்னோ என்

நெய்தல் மலர் அன்ன கண்?

 

இதன் விளக்கம்:-

“என்னைப் பார்த்துச் சிரிக்கிறீர்களா? நன்றாகச் சிரியுங்கள். நான் துன்புற்றுக் கொண்டிருக்கிறேன்.  என் தலைவனது மாயமான மலர்மாலை அணிந்த மார்பினைத் தழுவினால்தானே இன்பம்!” என்று புலம்புகிறாள். மேலும்

அடியே, உனக்கு நேர்ந்தது என்ன? என்பீராயின், அவன் என்னுடன் இணைந்தான். எனக்கு இது நேர்ந்தது" என்று உரைக்கும்வண்ணம் நிகழ்ந்திருந்தால், நெய்தல் மலரிதழ் போன்ற என் கண்ணுக்கன்றோ பசலை பாய்ந்திருக்கும்?  என்று புலம்பிக் கொண்டே இருக்கிறாள்.

எனவே இதுவும் பொருந்தாக் காதலுக்கு சான்றாகும்.


4. இறுதியாக காம‍ம் மிகுதியால் தகாதனவற்றைச் செய்ய வைக்கும் காதல்

அதாவது தன் தலைவியின் மீது கொண்ட காதலினால் பணிக்குச் செல்லாமல், அவளது சொற்களுக்கு அடிபணிந்து, அறமல்லாதவற்றைச் செய்யும் காதல். அல்லது, தலைவியைப் பிரிந்த சிறிது காலத்திலேயே காமத்தை அடக்கவியலாது வேறொரு பெண்ணை நாடிச் செல்லுதல்; இவை யாவும் பொருந்தாக் காதலே.

            இவற்றையும் தாண்டி இன்னும் ஒருவகைக் காதலும் பெருந்திணையில் வருகிறது. அது ஒரு பெண்ணின் விருப்பமின்றி அவளுடன் இணைய முற்படுதல். இதற்கு குறிஞ்சிக்கலியில் வரும் 62ம் பாடல் சான்றாகும்.

                        பாடல் அடிகள் (9-11)

சுடர்த் தொடீ! போற்றாய் களை, நின் முதுக்குறைமை; போற்றிக் கேள்!

வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது, நீர்க்கு இனிது என்று 10

உண்பவோ, நீர் உண்பவர்?

இதன் விளக்கம்:

உன்னுடன் இணைவது எனக்கு இன்பம் இல்லை என்றுரைக்கும் தலைவியிடம் “சுடர் வீசும் வளையல் அணிந்தவளே! உன் பேச்சினை மாற்று. வயதுக்கேற்றவாறு பேசு. இப்போது நான் சொல்வதைக் கேள். தண்ணீர் பருகுபவர் தனக்கு இனிதாக இருக்கிறது என்று பருகுவார்களே அன்றி, தண்ணீருக்கு இனிமையாக இருக்கிறதா என்றா பருகுவார்கள்?” என்று தலைவன் உரைக்கிறானாம்.

இங்ஙனம் இருவரின் உள்ளமும்,, பருவமும் மட்டுமல்ல. உருவமும் ஒத்து வரவில்லை எனில் அவை பெருந்திணைக்காதல் என்று சங்க இலக்கியங்கள் நமக்கு விள்குக்கின்றன. இவை இன்றளவும் உண்மைதானே! காதலோ, காமமோ இருவரின் உள்ளங்களும் ஒத்திருந்தால் மட்டுமே அவை முறையான காதலாகும். இல்லையெனில் அது இருவருக்கும் தீரா துன்பத்தையே தரும்.

 

இரண்டடி குறளும் இனியவை நாற்பதும் – ஒப்புமை நோக்கில்.

  முன்னுரை:           தமிழ்மொழியின் தொன்மையும் , புதுமைகளை ஏற்றுக் கொண்டு தன்னை மெருகேற்றிக் கொள்ளும் பாங்கும் யாவரும் அறிந்ததே. நமது இலக்கி...