அசைகள், சீர்கள்

அசைகள் என்றால் என்ன?

English syllable is அசை.


ஓரசை

இந்த ஓரசைகளை இரண்டு வகைப்படுத்தலாம்.

நேரசை மற்றும் நிரையசை.


1. குறில் எழுத்து மட்டும் தனியாக வந்தாலோ...

குறிலுடன் ஒற்று சேர்ந்து வந்தால் அது ஒரேஒரு அசை கொண்டது.

அதாவது ஓரசை. 

(எ.கா)

மண், பொன், கல் மெய். க,வ,ப. 

இது நேரசை


2. அதைப்போல நெடில் எழுத்து மட்டும் தனியாக வந்தாலோ...

நெடிலுடன் ஒற்று சேர்ந்து வந்தால் அதுவும் ஒரேஒரு அசை கொண்டது.

அதாவது ஓரசை. 

(எ.கா)

கை, மை, வாய், நாள், நாம்.

இது நேரசை.


3.மேலும் இரண்டு குறில் இணைந்து  வந்தாலோ...

அவற்றுடன் ஒற்று சேர்ந்து வந்தால் அதுவும் ஒரே ஒரு அசை கொண்டது.

அதாவது ஓரசை. 

(எ.கா)

சட, படம், *மலர்*, மணம், புயல்

இது நிரையசை.


4.மேலும் ஒரு குறிலெழுத்துடன் ஒரு நெடில் இணைந்து  வந்தாலோ...

அவற்றுடன் ஒற்று சேர்ந்து வந்தால் அதுவும் ஒரே ஒரு அசை கொண்டது.

அதாவது ஓரசை. 

(எ.கா)

துணை, கடாம், மழை, குழாம், 

இதுவும் நிரையசை

 இதுதான் அடிப்படை பாடம். நன்கு புரிந்து கொள்ளவும்.


அசைகள் சேர்ந்துதான் சொற்கள் அல்லது சீர்கள் உண்டாகுகின்றன.


ஈரசைச் சொற்கள்

எ.கா

இல்லறம் -  இச்சொல்லில் இரண்டு அசைகள் உள்ளன. 

இல் + லறம்.

*இல்* என்பது ஓரசை. 

இது நேரசை

*லறம்* என்பதும் ஓரசை.

இது நிரையசை.


இனி வாய்ப்பாடு..

மாச்சீர்கள்

நேர் × நேர் - தேமா 

(எ.கா) - காசு

நிரை × நேர் - புளிமா

(எ.கா) - பிறப்பு.


விளம்சீர்

நேர் × நிரை - கூவிளம்

நிரை × நிரை -  கருவிளம்


அடுத்து மூவசைச்சீர்.

அது காய்ச்சீர், கனிச்சீர் என இரண்டு வகைப்படும்.

நான்கு காய்ச்சீரும்

நான்கு கனிச்சீரும் உண்டு.


அடுத்து நாலசைச்சீர்.

அது தண்பூச்சீர்

நறும்பூச்சீர்,

தண்ணிழல்சீர்

நறும்நிழல்சீர்,

 என நான்கு வகைப்படும்.


நான்கு தண்பூச்ச்சீரும்

நான்கு நறும்பூச்சீரும்

நான்கு தண்ணிழல்சீரும்

நான்கு நறும்நிழல்சீரும்

 உண்டு.


தமிழ்ச்சொற்களில் நான்கசைச்சொற்கள் வருவதே அரிது.

ஐந்தசை சீர்கள் வராது.

(எனக்குப் புரிந்த வகையில்)


 ஆக....

இரண்டு - ஓரசைசீர்கள்

அதாவது

1.நேர் 

2.நிரை


நான்கு - ஈரசைச்சீர்கள்

மாச்சீர்

1.நேர் நேர் - தேமா 

2.நிரை நேர் - புளிமா

விளம்

3.நேர் நிரை  - கூவிளம்

4.நிரை நிரை - கருவிளம்


எட்டு - மூவசைசீர்கள்

காய்ச்சீர் - 4

1.நேர் நேர் நேர் - தேமாங்காய்

2.நிரை நேர் நேர் - புளிமாங்காய்

3.நேர் நிரை நேர் - கூவிளங்காய்

4.நிரை நிரை நேர் - கருவிளங்காய்

கனிச்சீர் - 4

5. நேர் நேர் நிரை - தேமாங்கனி

6. நிரை நேர் நிரை - புளிமாங்கனி

7. நேர் நிரை நிரை - கூவிளங்கனி

8. நிரை நிரை நிரை - கருவிளங்கனி


பதினாறு - நான்கசை சீர்கள்

தண்பூச்சீர் - 4

1.நேர் நேர் நேர் நேர் - தேமாந்தண்பூச்சீர்

2.நிரை நேர் நேர் நேர் - புளிமாந்தண்பூச்சீர்

3.நேர் நிரை நேர் நேர் - கூவிளந் தண்பூச்சீர்

4.நிரை நிரை நேர் நேர் - கருவிளந் தண்பூச்சீர்

நறும்பூச்சீர் - 4

5. நேர் நேர் நிரை நேர் - தேமாநறும்பூச்சீர்

6. நிரை நேர் நிரை நேர் - புளிமாநறும்பூச்சீர்

7. நேர் நிரை நிரை நேர் - கூவிளம்நறும்பூச்சீர்

8. நிரை நிரை நிரை நேர் - கருவிளம்நறும்பூச்சீர்

தண்ணிழல்சீர் - 4

9.நேர் நேர் நேர் நிரை - தேமாந்தண்ணிழ்சீர்

10.நிரை நேர் நேர் நிரை - புளிமாந்தண்ணிழல்சீர்

11.நேர் நிரை நேர் நிரை - கூவிளந்தண்ணிழல்சீர்

12.நிரை நிரை நேர் நிரை - கருவிளந்தண்ணிழல்சீர்

நறுநிழல்சீர் - 4

13. நேர் நேர் நிரை நிரை - தேமாநறுநிழல்சீர்

14. நிரை நேர் நிரை நிரை - புளிமாநறுநிழல்சீர்

15. நேர் நிரை நிரை நிரை - கூவிளம்நறுநிழல்சீர்

16.. நிரை நிரை நிரை நிரை - கருவிளம்நறுநிழல்சீர்


 குறிப்பு

வெண்பாக்களில்  ஈற்றுச்சீர்(கடைசிசீர்) எப்போதும் ஓரசை அல்லது ஈரசை மட்டும் தான் வர வேண்டும்.


அதனால்தான்

நாள்

மலர் 

காசு 

பிறப்பு என்று கூறுகிறோம்.


இனி வெண்பா வாசித்தால் ஈற்றுச்சீரின் வாய்ப்பாடு என்ன என்பதை முதலில் கண்டறிவோம் ..

இதுதான் அசை..


ஏழு அகத்திணைக்காதல்களில் பெருந்திணைக்காதல்

             சங்க இலக்கியங்கள் சுட்டும் ஏழு அகத்திணைக் காதல்களில், ஏழாம் அகத்திணைக்காதல் பெருந்திணையாகும். பெயரைப் பார்க்கும் ஏதோ பெருமை மிகு காதல் என்ற எண்ணம் வருகிறதா? எனில் அது முற்றிலும் தவறு. பெருந்திணைக் காதல்  என்றாலே பொருந்தாக் காதல் அல்லது பொருந்தாக் காம‍ம் ஆகும். இது மக்களால் இயல்பாக ஏற்றுக் கொள்ளப்படாத, ஒரு இழிவான காதலாகவே பார்க்கப்படுகிறது. இத்தகைய காதலைத் தற்காலத்தில் நிறைய காண்கிறோம். ஆனால் சங்க காலத்திலும் கூட இத்தகைய காதல்கள் இருந்திருக்கிறன  என்பது வியப்பிற்குரிய செய்தி அல்லவா? எட்டுத் தொகை நூல்களுள் ஆறு தொகை நூல்கள் அகவாழ்வு பற்றி பாடுகின்றன. இருந்தும் அவற்றுள் கலித்தொகை மாத்திரமே பெருந்திணைப் பாடல்களைப்  பாடுகின்றது. ஆனால் புறம் பாடும் புறநானூற்றில் ஐந்து பாடல்கள் பெருந்திணைப் பாடல்களாக வருகின்றன. தலைவன் தலைவியின் அகவாழ்வு பற்றி பாடினாலும், புலவர் அவர்களின் பெயர்களை வெளிப்படையாகச் சுட்டினால் அது புறப்பாடலில் வைக்கப்படும்.

 இதில் இன்னும் வியப்பு என்னவெனில், இத்தகைய மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாத பெருந்திணைக் காதல்கள் எவைஎவை என தொல்காப்பியர், இலக்கணமே வகுத்துள்ளார். தொல்காப்பியத்தில் அகத்திணையியலில் 56ம் பாடல் இது.

ஏறிய மடல்திறம் இளமை தீர்திறம்

தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்

மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்

செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே!

அதாவது மடலேறும் காதல், இளமை தீர்ந்தபின் வரும் காதல், ஆராயாது வெளியிடும் பெருங்காமம், காம‍ம் மிகுந்ததால் செய்யும் தகா செயல்கள் இந்நான்கும் தொல்காப்பியம் காட்டும் பெருந்திணையின் வகைகள் ஆகும். இனி ஒவ்வொரு வகையாகப் பார்க்கலாம்.

1. முதலில் ஏறிய மடல்திறம். அதாவது மடலேறி தன் காதலை வெளிப்படுத்துதல்.

கைக்கிளைத் திணையில் தலைவன் மடலேறப் போவதாகக் கூறி, தலைவியை அச்சுறுத்துவான். ஆனால் பெருந்திணையிலோ மடலேறியே விடுகிறான். மடலேறுதல் என்பது பனை மரமட்டையின் அடியினைக் கொண்டு, குதிரை போன்ற சிலை ஒன்றை வடித்து, அதன் மேல் தலைவன் அமர்ந்திருப்பான். ஊரார் அந்த பாவைக் குதிரையை இழுத்தபடி ஊர் முழுதும் சுற்றி வருவார்கள். அதன்மேல் அமர்ந்திருக்கும் தலைவன், தனது உடம்பில் சாம்பலை பூசி பூவிளைப்பூ, எருக்கம்பூ, ஆவாரம்பூ இவற்றாலான மாலையை அணிந்து  கொண்டு. தன் காதலியின் வரைந்த ஓவியத்தைக் கையில் பிடித்தபடி வலம் வருவான். இதன் மூலம் தன் காதலை ஊராரருக்கும், காதலிக்கும் வெளிப்படையாக அறிவிப்பான். இதுவே சங்ககாலங்களில் மடலேறுதல் என வழங்கப்பட்டு வந்தது. ஒருமுறை மடலேறிய பின்பும் தன் காதல் நிறைவேறவில்லை என்றால் மறுமுறையும் மடலேறி விட்டு தன் வாழ்க்கையை முடித்துக்கொள்வான். எனவே இது பொருந்தாக் காதலில் சேரும்.

இதைப் பற்றி கலித்தொகையில் நெய்தற்கலியில் 138ம் பாடலில் பாடுகிறார் புலவர் நல்லந்துவனார்.

 (பாடல் அடிகள் 8 முதல் 17 வரை...)

மணிப் பீலி சூட்டிய நூலொடு, மற்றை

அணிப் பூளை, ஆவிரை, எருக்கொடு, பிணித்து, யாத்து,

மல்லல் ஊர் மறுகின்கண் இவட் பாடும், இஃது ஒத்தன்

எல்லீரும் கேட்டீமின் என்று

படரும் பனை ஈன்ற மாவும் சுடர் இழை,

நல்கியாள், நல்கியவை

பொறை என் வரைத்து அன்றி, பூநுதல் ஈத்த

நிறை அழி காம நோய் நீந்தி, அறை உற்ற

உப்பு இயல் பாவை உறை உற்றது போல,

உக்குவிடும் என் உயிர்

 

இதன் விளக்கம்..

தலைவன் நீல மயிலின் பீலி, பூளாப்பூ, ஆவாரம்பூ, எருக்கம்பூ ஆகியவற்றை நூலில் கோத்துக் கட்டிய மாலை அணிந்துகொண்டு, ஊர்த் தெருவில் தலைவியின் பெயரைச் சொல்லிப் பாடிக்கொண்டு வருகிறான். ஊரார் இவனைக் கேலி செய்கின்றனர். ஆனால் அவனோ

“எல்லாரும் இதனைக் கேளுங்கள் - என் நெஞ்சத் துன்பமும், இந்த மடல் குதிரையும்தான், இழையணிந்த என் தலைவியானவள் எனக்குத் தந்தவை. என்னுடைய பொறுமையோ கட்டுக்குள் இல்லை. பூப்போன்ற நெற்றி கொண்டவள் எனக்குக் கொடையாக நல்கிய காம நோய் இது. பாறை மேல் இருக்கும் உப்பால் செய்த பொம்மை மழையில் நனைந்து உருகுவது போல என் உயிர் உருகுகிறது. “ என்று புலம்பியபடியே மடலேறி வருகிறான். அவள் ஒத்துக்கொண்டால், திருமணத்திலும், அவள் மறுத்தால் அவனது மரணத்திலும் முடியும் இத்தகு காதல் பொருந்தாக் காதல் வகையாகும்.

 


2. அடுத்ததாக இளமை தீர்திறம். அதாவது இளமை தீர்ந்தபின் வரும் காதல்.

இது மேலும் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது.

அ. தலைவன் முதியவனாக, தலைவி இளையவளாக இருந்து வரும் காதல்.

ஆ. தலைவன் இளையவனாக, தலைவி முதியவளாக இருந்து வரும் காதல்.

இ. அல்லது இருவருமே முதியவர்களான பிறகு தோன்றும் காதல்.

இவ்வகைக்கு சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளனவோ இல்லையோ, இன்றும் வளைகுடா நாடுகளில் வேலைக்குச் சென்று, இளமை முழுதும் தொலைத்த பின்பு, முதுமையில் இல்லறம் நடத்த தாய்நாடு திரும்புபவர்களின் காதலும் பொருந்தாக் காதலுக்கான சான்றுதானே!

 

3. அடுத்ததாக ஆராயாமல், தெளிவற்ற உள்ளத்தோடு வெளிப்படுத்தும் காம‍ம். இது பெரும்பாலும் தலைவிக்கு உரிய காதல்வகையாகும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய பண்புகளைத் தன்னிடம் ஒருங்கே கொண்ட ஒரு பெண், தனது காமத்தை, ஊரார் அறிய வெளிப்படுத்த மாட்டாள். ஆனால் காமத்தீ தன்னைச் சுட்டெரிப்பதால், அப்பண்புகளையும் மீறி வெளிப்படுத்துகிறாள் எனில் அது பொருந்தாக் காம‍ம் ஆகும். இதற்கு சான்றாக கலித்தொகையில் வரும் 142ம் பாடலைக் கூறலாம்.

(பாடல் அடிகள் 1 – 5 வரை)

புரிவுண்ட புணர்ச்சியுள் புல் ஆரா மாத்திரை,

அருகுவித்து ஒருவரை அகற்றலின், தெரிவார்கண்,

செய நின்ற பண்ணினுள் செவி சுவை கொள்ளாது,

நயம் நின்ற பொருள் கெடப் புரி அறு நரம்பினும்

பயன் இன்று மன்றம்ம, காமம் இவள் மன்னும்   5

திருமணம் ஆகி முதலிரவு அன்றே தலைவன் தலைவியை பிரிய நேரிட்டது. இதனைக் கண்டவர் கலக்கத்துடன் சொல்கின்றனர். யாழில் பண்ணிசைக்கும் தொடங்கும் போது, யாழின் நரம்பு அறுபட்டு, செவிக்குச் சுவை கிட்டாததைப் போல, தலைவியின் காமம் பயனின்றி போய்விட்டது. அவளுடன் கூடியிருக்கும் சுற்றத்தாரால் விளையும் இன்பம் உண்டோ? அவர்களால் இவளுக்கு வரும் பயன்தான் என்ன?

காம‍த்தை அடக்கவியலா தலைவி பின்வருமாறு புலம்புகிறாளாம்.

(பாடல் அடிகள் 15 – 23 வரை)

என்று, எல்லீரும் என் செய்தீர்? என்னை நகுதிரோ?    15

நல்ல நகாஅலிர் மற்கொலோ யான் உற்ற

அல்லல் உறீஇயான் மாய மலர் மார்பு

புல்லிப் புணரப் பெறின்.

'எல்லா! நீ உற்றது எவனோ மற்று?' என்றீரேல், 'எற் சிதை

செய்தான் இவன்' என, 'உற்றது இது' என,   20

எய்த உரைக்கும் உரன் அகத்து உண்டாயின்,

பைதல ஆகிப் பசக்குவமன்னோ என்

நெய்தல் மலர் அன்ன கண்?

 

இதன் விளக்கம்:-

“என்னைப் பார்த்துச் சிரிக்கிறீர்களா? நன்றாகச் சிரியுங்கள். நான் துன்புற்றுக் கொண்டிருக்கிறேன்.  என் தலைவனது மாயமான மலர்மாலை அணிந்த மார்பினைத் தழுவினால்தானே இன்பம்!” என்று புலம்புகிறாள். மேலும்

அடியே, உனக்கு நேர்ந்தது என்ன? என்பீராயின், அவன் என்னுடன் இணைந்தான். எனக்கு இது நேர்ந்தது" என்று உரைக்கும்வண்ணம் நிகழ்ந்திருந்தால், நெய்தல் மலரிதழ் போன்ற என் கண்ணுக்கன்றோ பசலை பாய்ந்திருக்கும்?  என்று புலம்பிக் கொண்டே இருக்கிறாள்.

எனவே இதுவும் பொருந்தாக் காதலுக்கு சான்றாகும்.


4. இறுதியாக காம‍ம் மிகுதியால் தகாதனவற்றைச் செய்ய வைக்கும் காதல்

அதாவது தன் தலைவியின் மீது கொண்ட காதலினால் பணிக்குச் செல்லாமல், அவளது சொற்களுக்கு அடிபணிந்து, அறமல்லாதவற்றைச் செய்யும் காதல். அல்லது, தலைவியைப் பிரிந்த சிறிது காலத்திலேயே காமத்தை அடக்கவியலாது வேறொரு பெண்ணை நாடிச் செல்லுதல்; இவை யாவும் பொருந்தாக் காதலே.

            இவற்றையும் தாண்டி இன்னும் ஒருவகைக் காதலும் பெருந்திணையில் வருகிறது. அது ஒரு பெண்ணின் விருப்பமின்றி அவளுடன் இணைய முற்படுதல். இதற்கு குறிஞ்சிக்கலியில் வரும் 62ம் பாடல் சான்றாகும்.

                        பாடல் அடிகள் (9-11)

சுடர்த் தொடீ! போற்றாய் களை, நின் முதுக்குறைமை; போற்றிக் கேள்!

வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது, நீர்க்கு இனிது என்று 10

உண்பவோ, நீர் உண்பவர்?

இதன் விளக்கம்:

உன்னுடன் இணைவது எனக்கு இன்பம் இல்லை என்றுரைக்கும் தலைவியிடம் “சுடர் வீசும் வளையல் அணிந்தவளே! உன் பேச்சினை மாற்று. வயதுக்கேற்றவாறு பேசு. இப்போது நான் சொல்வதைக் கேள். தண்ணீர் பருகுபவர் தனக்கு இனிதாக இருக்கிறது என்று பருகுவார்களே அன்றி, தண்ணீருக்கு இனிமையாக இருக்கிறதா என்றா பருகுவார்கள்?” என்று தலைவன் உரைக்கிறானாம்.

இங்ஙனம் இருவரின் உள்ளமும்,, பருவமும் மட்டுமல்ல. உருவமும் ஒத்து வரவில்லை எனில் அவை பெருந்திணைக்காதல் என்று சங்க இலக்கியங்கள் நமக்கு விள்குக்கின்றன. இவை இன்றளவும் உண்மைதானே! காதலோ, காமமோ இருவரின் உள்ளங்களும் ஒத்திருந்தால் மட்டுமே அவை முறையான காதலாகும். இல்லையெனில் அது இருவருக்கும் தீரா துன்பத்தையே தரும்.

 

முல்லைப்பாட்டும் நெடுநல்வாடையும் - ஒப்புமைகள்

 

முன்னுரை:-

            தமிழ்ச்சங்க இலக்கிய நூல்களில, ஒன்றான பத்துப்பாட்டு என்னும் முத்தான தொகுப்பில் இடம்பெற்றவையே முல்லைப்பாட்டு மற்றும் நெடுநல்வாடை என்னும் இரு நூல்கள் ஆகும். முல்லைப்பாடலும், நெடுநல்வாடையும் ஒரே செய்தியைத்தான் கூறுகின்றன. போருக்குச் சென்ற தலைவனின்  பிரிவையெண்ணி தலைவி ஆற்றியிருத்தலைக் கூறும் முல்லைத் திணையில் அமையப்பெற்றிருக்கின்றன. தலையாலங்கானத்துப் போரின்போது நடந்த நிகழ்வுகளைக் கூறுவதகவே இரு பாடல்களும் உள்ளன. ஆயினும் அவற்றுள் முல்லைப்பாடல் அகத்திணையிலும், நெடுநல்வாடை புறத்திணையிலும் பாடப்பட்டிருக்கின்றன. தலைவன், தலைவி பற்றிய குறிப்புகள் பாடப்படாததால் முல்லைப்பாட்டு அகத்திணையிலும், வேப்பந்தழை அணிந்த வீரன் என்னும் குறிப்பினால், பாட்டின் தலைவன் பாண்டியமன்னன் என்னும் செய்தி வெளிப்பட்டதால் நெடுநல்வாடை புறத்திணையிலும் வைக்கப்பட்டு்ள்ளது.

           

ஆசிரியர் பற்றி:-

            இருநூல்களின் ஆசிரியர்களும் ந என்னும் சிறப்பு அடைமொழியைப் பெற்றவர்கள். முல்லைப்பாட்டை நப்பூதனாரும், நெடுநல்வாடையை நக்கீரனாரும் இயற்றியுள்ளனர். இருவருமே முல்லை நிலத்தின் அழகை வருணித்துள்ளனர்.

            காதலும் வீரமும் ஒருங்கே கொண்ட தமிழ் மண்ணில், தங்களது நூல்களில் இருவருமே தலைவியின் பிரிவுத் துன்பத்தையும், போரிலே வென்ற தலைவனின் வீரத்தையும் அழகாகப் பதிவிட்டுள்ளனர். பூதனார் 103 அடிகளில் முல்லைப்பாடலையும், கீரனார் நெடுநல்வாடையையும் பாடியுள்ளனர்.

 

பொதுவானவை:-

            1. இரண்டு நூல்களிலும் தலைவியைத் தேற்ற வேண்டியுள்ளது. மையுண்ட தலைவியின் கண்கள், முத்துப் போல கண்ணீர் உதிர்க்க, முல்லைப்பாட்டில் முதுமகளிரும், நெடுநல்வாடையும் செவிலித்தாயும் தேற்றுகின்றனர்.

            2. இரண்டு பாடல்களிலும் முல்லை நிலமலர்களான காந்தள், குவை பற்றிய குறிப்புகள் உள்ளன. வெண்காந்தள் பளிச்சிட, செங்காந்தள் குருதி போன்றும் மண்ணில் பரவியிருக்கின்றன.

            3. முல்லைப்பாட்டில் ஆய்ச்சியர் தாம் வளர்க்கும் ஆவின் கன்றுகளிடம் அன்பு காட்டி, ‘உமது தாயர் இதோ வருவர்’, எனக் கூற, நெடுநல்வாடையில் குளிரால் வாடி கலங்கி நிற்கும் கோவலனின் நிலை கூறப்படுகிறது.

            4. அகத்திணை நூலான முல்லைப்பாட்டில், காட்டிலே போர்க்களத்திலே பாசறைகள் கட்டப்படும் முறையும், அதன் அமைப்பும்  விளக்கப்பட, புறத்திணை நூலான நெடுநல்வாடையிலோ அரண்மனையும், அந்தப்புரமும் அமைந்த விதமும், தலைவியின் கட்டிலின் அமைப்பும் விளக்கப்படுகிறது. எத்துணை அழகான முரண்.

            5. முல்லைப்பாட்டிலும் சரி, நெடுதல்வடையிலும் சரி, போரில் தலைவன் வென்ற செய்தி தெரிவிக்கப்படுகிறது. அவன் வீரத்தை, அவனது வெற்றியினால் வெளிப்படுத்திய ஆசிரியர்கள், தலைவனின் கண்ணோட்டத்தையும் கூறத் தவறவில்லை.

            6. தனக்கு வெற்றி ஈட்டித் தந்து, வில்லேந்தி, வேலேந்தி, வாளேந்தி, விழுப்புண் பெற்று வருந்தியிருக்கும் வீரர்களின் வருத்த‍த்தைப் போக்கும் வகையில், அரசனானவன் பாசறைக்கண் சென்று, அவர்களைக் கண்டதாக இரு புலவர்களும் பாடுகின்றனர்.

            7. வீர‍ர்களை மட்டுமல்ல, விலங்குகளைக் கண்டும் இரங்கினானாம் தலைவன். முல்லைப்பாட்டின் தலைவன், தலைவியைக் காணத் தேரில் விரைந்து செல்வதாக நிறைவுற, நெடுநல்வாடையோ தலைவன் தலைவியின் பிரிவு வருத்தினாலும், பாசறைக்கண் இருந்து, வீர‍ர்களைக் காண்பதாக நிறைவுறுகிறது.

            8. முல்லைப்பாட்டின் நிகழ்வுகள் கார்காலமாகவும், நெடுநல்வாடையின் நிகழ்வுகள் கூதிர்காலமாகவும் கூறப்படுகிறது. இரு நூல்களும் முல்லைத் திணையில் பாடப்பட்டது.

            இத்துணை ஒற்றுமைகள் காணப்பட்டாலும், சில அடிகள் மிக அழகாக தனித்துவம் பெற்றே விளங்குகின்றன. 

முல்லைப்பாட்டு -கதைச் சுருக்கம்

                பாடு இமிழ் பனிக்கடல் பருகி, வான் ஏர்பு

                கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி

                பெரும்புயல் பொழிந்த சிறுபுன்மாலை

                ..............................................................

        ஒலிக்கும் பனிக்கடலை பருகி, வலப்புறம் எழுந்து, நேராக உயர்ந்து, விரைந்து செல்லும் மேகமானது, பெரும் மழை பொழிந்த கொடிய மாலை நேரத்தில்...

          மழை பொழியும் மாலைக்காலம் எங்ஙனம் கொடியதாக முடியும்? நமக்கெல்லாம் இனிமை தரும், ஆனால் தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவிக்கு...

          விரிச்சி அதாவது நல்ல குறி கேட்க்க் காத்திருக்கும் பெருமுது பெண்டிர்க்கு. ஆய்ச்சியர் தம் கன்றுகளுக்கு கூறும் ஆறுதல் மொழியே நல்ல குறியானது.

          நாழி கொண்ட நெல்லோடு, நறு வீமுல்லை, அரும்பு அவிழும் அரளி கலந்து தூவி, ஊரின் புறத்தே நிற்கும் கொற்றவையிடம் வேண்டினராம்.

        முல்லைத் திணைக்கான உரிப்பொருள், கருப்பொருள், முதற்பொருள் அனைத்தையும் இந்த பத்தே அடிகளில் கூறி விட்டார் நப்பூதனார்.

     நல்ல செய்தி கிடைத்தவுடன், தலைவியிடம் சென்று, தலைவன் போரில் வென்று, தன் தேரில் திரும்பிக் கொண்டிருக்கிறானாம்.. நீ வருந்தாதே என்று தேற்றுகின்றனர்.

           

            இனி காட்சி மாறி, காட்டிலே தலைவனின் பாசறைக்குச் செல்கிறது,

            பாசறைகள் எவ்வளவு பாதுகாப்புடன் அமைக்கப்படுடள்ளது என்று விளக்கும் போது, காட்டாறு பாயும் முல்லை நிலத்தில், மணக்கும் முல்லை பசும்புற்கள் என அனைத்தையும் அழித்து, அங்கே வேட்டுவர்கள் ஏற்கனவே அமைத்திருக்கும் அவர்கள் இருப்பிடத்தையும் கைப்பற்றி, அவர்களைக் கொண்டே தம் படைகளுக்கு வேண்டிய பாசறைகளையும் அமைத்துக் கொண்டனராம்.

   படை என்றால் வீரர்கள் மட்டுமா? குதிரை யானை என்னும் விலங்குகளும்தான். யானைகளைக் கவனிப்போருக்கு யானையுடன் பேசும் வடமொழி தவிர வேறுமொழி தெரியாது என்ற குறிப்பும் உள்ளது.

     யானைப்படை, குதிரைப்படை வீரர்களிடம் வில், வாள், வேல் என படைக்கருவிகள் இருக்கம் அல்லவா? அவைகளும் ஆங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

         பாசறைகளுக்கு நடுவில், எல்லா அறைகளுக்கும் நடுவில், இன்னும் பாதுகாப்புடன் நீண்ட தூண்களும், திரைகளும் கூடிய பாசறை அரசனுக்குக் கட்டப்பட்டிருந்தது.

          பாசறைப் பெண்டிர் என்ற சொல்லாடல் கேள்விப்பட்டதுண்டா? பொருக்குப் பெண்களை அழைத்துச் செல்லும் வழக்கமு இல்லையே? பின்னர் ஏன் பெண்டிர் என சிந்தித்தால்

                        “நெய்உமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇ

                       கைஅமை விளக்கம் நுத்தோறும் மாட்ட”

            அதாவது அத்தனை பாசறைகளிலும் வைக்கப்பட்டிருக்கும் நீண்ட திரி கொண்ட

        பாவை விளக்குகள் அணைய முற்படும் போதெல்லாம், தம் கையில் வைத்திருக்கும் நெய் வைத்திருக்கும் சுரைக்காய் குடுவையைக் கொண்டு எரியச் செய்வது இவர்கள்தான் இப்பெண்டிர்தான்.

            ஆனாலும் பளிச்சிடும் ஒளிவிடும் வாளினையும், தம் கச்சையில் கொண்டிருப்பார்களாம். எவரேனும் தாக்க வந்தால், எதிர்த்தாக்குதல் நடத்தும் அளவு வாள்வீச்சில் வல்லமை கொண்டவர்களாக இருப்பார்களாம்.

            இவர்களைத் தவிர மெய்க்காப்பாளார்கள், குறுநீர்க்கன்னல் என்னும் நாழிகை காட்டும் கருவி கொண்டு, நாழிகையை கணக்கிட்டு, அறிவிக்கும் கணியர்கள் என இவர்களும் பாசறையில் இருப்பார்களாம். அது மட்டுமா? இரும்பில் வார் ஒன்றி கச்சையில் கட்டிய யவனர்கள் அதாவது கிரேக்கர்கள்; பாம்பு  போல சட்டை அணிந்த மிலேச்சர்கள் என அரசனுக்கு குற்றேவல் பணி செய்பவர்களும் பாசறையிலே யே இருந்திருக்கிறார்கள்.

            இத்தகைய பாசறையில், வெற்றி முழக்கம் முழங்கும் பாசறையில் ஒரு உருவம் மட்டும் அமைதியாய் எதையி சிந்தித்தபடி படுத்திருந்தது.

            வேலினால் விழுப்புண் பெற்று, அடிபட்டு தன் பெண்யானையின் நினைவே இல்லாமல் ஆண்யான்கள் துடிப்பதை எண்ணியும், அதுவும் எப்படி துடித்தது தெரியுமா? எதிரியின் யானைப்படை வேழங்களின் பருத்த தும்பிக்கைகள் வெட்டுண்டு, தரையிலே பாம்பு பதைப்பது போல துடிக்கும் அல்லவா? அதுபோல வலியினால் ஆண்யானைகள் துடிப்பதை எண்ணியும்,

            சேணத்தில் அம்பு பாய்ந்ததால் புண் கொண்டு, உணவு கொள்ளாது கிடக்கும் குதிரைகளைப் பற்றி எண்ணியும், போரிலே உயிர்நீத்த செஞ்சோற்றுக் கடன் தீர்த்த தனது வீர‍ர்களைப் பற்றிய எண்ணத்துடனும்,

            தனக்கு ஏற்பட்ட காயங்கள் பற்றிய நினைவின்றி , தன் கண்ணிமாலையைத் திருகிய வண்ணம் படுத்திருந்த அந்த மன்னன் வேறுயாருமல்ல; போரிலே வென்ற இப்படையின் மன்ன‍ன்தான்.

            இங்கே இவன் தனக்காக துன்புறும் படைகளை எண்ணி வருந்த, ஆங்கே இவனுக்காக இவன் வருகைக்காக, தலைவி பசலை கொண்டு, இடையில் மேகலை நில்லாமல், கைகளில் வளையணி கழன்று விழ அருகிலிருக்கும் பகுதியில் அருவி விழும் ஓசையைக் கேட்டபடி இருந்தாளாம்.

            சில நாட்கள் கழிந்து, அந்த அருவி விழும் ஓசையையும் மீறி, வேதேதோ ஒசை அவள் செவியை எட்டுகிறது.

                       “வேண்டு புலம் கவர்ந்த ஈண்டு பெருந்தானையோடு

                      விசயம், வெல்கொடி உயர வலன்ஏர்பு

                      வயிரும், வளியும் ஆர்ப்ப....”

            அதாவது போரில் வென்ற தனது பெரும் படையுடன், வெற்றிக்கொடி உயர்த்தி, உயர்ந்த வயிரும், வளைந்த கொம்பும் ஒருங்கே முழங்கும் ஓசைதான் அது;

            இப்படை இன்னும் காடுகளில்தான் வந்து கொண்டிருக்கிறது.

                            “செறி இலைக்காயா அஞ்சனம் மலர,

                        முறி இணர்க் கொன்றை நன்பொன்கால்

                        கோடல் குவி அங்கை அவிழ

                        தோடுஆர் தோன்றி குருதி பூப்ப...”

 

          அதாவது

            செறிந்த இலை கொண்ட  காய்ந்த அவிரிப்பூ மலர,

            கொத்தான கொன்றைப்பூ பொன்போல பூக்க,

            வெண்காந்தள் பூ அரும்பு விரல் போல விரிய,

            செங்காந்தள் மலரோ குருதியாய் பூக்க...

           

            செம்மாயான முல்லைக்காடுகளில் வரகுக் கொல்லையில் நீண்டு திரிந்த கொம்புகள் கொண்ட ஆண்மான்களும், பெண்மான்களும் இணைந்து தாவ... எதிர்த்து செல்லும் வெண்மேகங்களிலிருந்து மழை பொழிய...

            நாம் விரைந்து செல்லும் போது எதிர்தோன்றும் காட்சிகள் பின் செல்வது போல, இங்கே வள்ளிக்கிழங்குகள் முதிர்ந்த காடுகள் பின் செல்ல...

            அழகிய நெடிய தேரை, தேரோட்டி ஓட்ட, தலைவன் திரும்பிக் கொண்டிருந்தானாம். என்று முல்லைப்பாட்டை இனிதாக முடிக்கிறார் நப்பூதனார்.

 

இரண்டடி குறளும் இனியவை நாற்பதும் – ஒப்புமை நோக்கில்.

  முன்னுரை:           தமிழ்மொழியின் தொன்மையும் , புதுமைகளை ஏற்றுக் கொண்டு தன்னை மெருகேற்றிக் கொள்ளும் பாங்கும் யாவரும் அறிந்ததே. நமது இலக்கி...