ஔவையாரும் முல்லைத்திணைப் பாடல்களும்...

 சங்ககால ஔவையார்

            சங்ககாலப் பெண்பாற் புலவர்கள் பெயர்களில், முதற்பெயராக அனைவரும் கூறுவது ஔவையாரைத்தான். இவர் கிட்டத்தட்ட 59 பாடல்கள் பாடி அதிகப்பாடல்கள் பாடிய சங்ககாலப் புலவர்கள் வரிசையில் ஒன்பதாம் இடத்தில் உள்ளார்.  59 பாடல்களில் 26 பாடல்கள் அகம் பற்றியும், 33 பாடல்கள் புறம் பற்றியும் பாடியுள்ளார். பிற்காலத்தில் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி, மூதுரை பாடிய ஔவையார் வேறொருவர் ஆவார்.

            முல்லைத்திணைக்கான மூன்று பொருள்கள்

          முதற்பொருளாவன:

            நிலமும் பொழுதும்... திருமால் அருள்தரும் காடும் காடு சேர்ந்த இடமும். இதன் பெரும்பொழுது கார்காலமும்(ஆவணியும், புரட்டாசியும்), சிறுபொழுது மாலையும் ஆகும்.

          கருப்பொருளாவன.

            தெய்வம் – திருமால்; உணவு – வரகும், முதிரையும்         விலங்கு – மானும், முயலும்; மரம் –  கொன்றை, குருது, புதல்;     புள் – கானாங்கோழி;   இசைக்கருவி – ஏறுகோட்பறை;  தொழில்  - நிரை மேய்த்தல்;  மலர் – முல்லை. பிடவு;  நீர் – கான் ஆறு;

          உரிப்பொருளாவன:

            தலைவன் தலைவியைப் போரின் பொருட்டோ, தொழிலின் பொருட்டோ, பிரிதல்.

 

        சங்ககால ஔவையார் ஐந்து முல்லை நிலப்பாடல்களைப் பாடியுள்ளார். அவை மூன்று நற்றிணைப்பாடல்களும் (371, 381, 394),  இரண்டு குறுந்தொகைப் பாடல்களும் (99 மற்றும் 813)  ஆகும்.


நற்றிணைப் பாடல் 371.

காயாங் குன்றத்துக் கொன்றை போல

மா மலை விடர் அகம் விளங்க மின்னி

மாயோள் இருந்த தேஎம் நோக்கி

வியல் இரு விசும்பு அகம் புதையப் பாஅய்

பெயல் தொடங்கினவே, பெய்யா வானம்

நிழல் திகழ் சுடர்த் தொடி ஞெகிழ ஏங்கி

அழல் தொடங்கினளே ஆயிழை; அதன் எதிர்

குழல் தொடங்கினரே கோவலர்

தழங்கு குரல் உருமின் கங்குலானே.

 

(தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன், தன் பணி முடிந்து திரும்பி வரும் வழியில், தேர்ப்பாகனிடம் தேரினை விரைந்து ஓட்டும்படிச் சொன்னபோது இங்ஙனம் உரைத்தான்.)

 

விளக்கவுரை:

            காயாத மரங்களையுடைய மலையில், சரக்கொன்றை மலர் பூத்தது போல;

            பெரிய மலையினூடே உள்ள பிளவுகள் எல்லாம் விளங்கும்படியாக மின்னி;

            என் காதலியாகிய மாமை நிறமுடையாள் இருக்கும் இடம் நோக்கிச் சென்று;

            விரிந்த கரிய ஆகாயம் எல்லாம் மறைபடும்படி பரந்து,

            மழைபெய்யாதிருந்த மேகங்கள் மழை பெய்யத் தொடங்கிவிட்டன;

            நிழல் விளங்கிய ஒளியையுடைய கைவளைகள் எல்லாம் கழற, ஏக்கமுற்று,

            அழத் தொடங்கினளே, ஆராய்ந்தணிந்த அணிகலன்களையுடைய எம் தலைவி. அவளுக்கு எதிர்ப்பாட்டு போல,

            கோவலர் புல்லாங்குழலை, முழங்குகின்ற இடியோசை போல இரவிலே வாசிக்கத் தொடங்குவர்.

            (“கார்காலத்தில் வருவதாகச் சொல்லியிருந்தேன். கார்காலமும் வந்து விட்டது. என் தலைவி எதிர்பார்த்துக் காத்திருப்பாள். ஆதலால் என் தலைவி வருந்தும் முன் விரைவாகச் செல்வோம்.”)


 

நற்றிணைப் பாடல் 381

அருந் துயர் உழத்தலின் உண்மை சான்ம்' எனப்

பெரும்பிறிது இன்மையின் இலேனும் அல்லேன்;

கரை பொருது இழிதரும் கான் யாற்று இகுகரை

வேர் கிளர் மராஅத்து அம் தளிர் போல,

நடுங்கல் ஆனா நெஞ்சமொடு, இடும்பை

யாங்கனம் தாங்குவென் மற்றே?- ஓங்கு செலல்

கடும் பகட்டு யானை நெடு மான் அஞ்சி,

ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்க,

தேர் வீசு இருக்கை போல,

மாரி இரீஇ மான்றன்றால் மழையே.

           

            (தலைவன் சொல்லிச் சென்ற கார்காலம் வந்தும், இன்னமும் திரும்பி வராத தலைவனை எண்ணித், தோழியிடம் தலைவி புலம்பியது.)

 

விளக்கவுரை:

            பிரிவின் துன்பத்தில் நான் உழன்றாலும், அவர்பால் அன்பு கொண்டு சாவேன் என்பதே உண்மையாகும்;

            இன்னும்  இறந்தொழியவில்லை என்பதால் அன்பிலேன் அல்லேன்!

            கரையை மோதியோடுகின்ற கான்யாற்றின் இடிகரையில்,

            வேர்களெல்லாம் வெளிப்பட்டு நிற்கும் மாமரத்தின், காற்றில் அலையும் அழகிய மாந்தளிர்போல;

            நடுங்குதல் நீங்காத நெஞ்சுடன் இருக்கும் நான், அவர் வராத இப்பிரிவின் துன்பத்தை எவ்வாறு தாங்கவல்லேன்?

            தலைநிமிர்ந்து நடக்கும் உயர்ந்த, விரைந்த நடையையுடைய களிற்றியானைப் படையை உடைய நெடுமான் அஞ்சி என்னும் மன்னன்,

            இரங்கிய உள்ளத்தால், தன்புகழ் நீண்டகாலம் விளங்குமாறு,

            இரவலர்க்குத் தேர்களை விடாமல் வாரிவழங்கும் அவனது அரசிருக்கையைப் போல,

            மேகமும், விடாமல் மழை பெய்து என்னை மயங்கச் செய்கிறது.

            (“கார்காலம் வந்தும் இன்னமும் அவர் வரவில்லையே”.)


 

நற்றிணைப் பாடல் 394

மரந்தலை மணந்த நனந் தலைக் கானத்து,

அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை,

பொன் செய் கொல்லனின், இனிய தௌர்ப்ப,

பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடுந் தேர்,

வன் பரல் முரம்பின், நேமி அதிர,

சென்றிசின் வாழியோ, பனிக் கடு நாளே;

இடைச் சுரத்து எழிலி உறைத்தென, மார்பின்

குறும் பொறிக் கொண்ட சாந்தமொடு

நறுந் தண்ணியன்கொல்; நோகோ யானே?

 

            (தன்னுடன் கூடிய தலைவன், தன்னை விட்டுப் பிரிந்து செல்லும் போது, தலைவி இங்ஙனம் எண்ணினாளாம்.)

 

விளக்கவுரை:

            மரங்கள் மிக நெருங்கிப் பொருந்திய இடமகன்ற காட்டில்,

            வாடிய ஞெமை மரத்தின் மீதிருந்த பேராந்தை;

            பொற்கொல்லன் பொன்னணி செய்யும் போது எழுப்பும் இனிமையான ஒலி போல ஒலிக்க,

            பூட்டிய மணிகள் ஒலிக்கும், அரியஅணிகள் விளங்கிய நீண்ட தேரானது;      

            வறண்ட பரல் கற்கள் கிடக்கும் மேட்டு நிலத்தின்கண் அதிருமாறு செல்ல,

            சென்றனன் வாழி!  இப்பொழுது பனி விழும் இந்நாளில்,

            வழியில் உள்ள மேகங்கள் வந்து பொழியும் போது,

            மார்பில் குறிய புள்ளிகளமைந்த பூசிய சாந்தத்தோடு,

            நறிய குளிர்ச்சியுடையனாய் நின்றான்!

            நான் அவன் நிலையை எண்ணி நோகிறேன்.

           

இரண்டடி குறளும் இனியவை நாற்பதும் – ஒப்புமை நோக்கில்.

  முன்னுரை:           தமிழ்மொழியின் தொன்மையும் , புதுமைகளை ஏற்றுக் கொண்டு தன்னை மெருகேற்றிக் கொள்ளும் பாங்கும் யாவரும் அறிந்ததே. நமது இலக்கி...